×

இலவசங்களை கொடுக்காதீர்கள் என அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘மக்களுக்கு இலவசங்களை வழங்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது,’ என்று தேர்தல் இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்கின்றன. இதனால் நடைமுறை பாதிக்கப்படுவதாகவும், தேர்தலுக்குப் பிறகு அந்த வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாமல் ஏமாற்றி விடுகின்றன என்றும் பரலவாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தேர்தல் நேரங்களில் இலவசம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஏற்கனவே பலமுறை விசாரித்துள்ள தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, இந்த இலவசங்கள் விவகாரத்தை பற்றி விரிவாக ஆராய குழு அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி, ஒன்றிய அரசும் குழு அமைத்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. அப்போது, ‘இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டுமா? தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க உத்தரவிட வேண்டுமா?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ‘அவ்வாறு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது’ என பதில் அளித்தது. இதை கேட்ட தலைமை நீதிபதி, ‘இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்னை என்பதால் அனைத்து தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும். தேர்தல் இலவச அறிவிப்பு விவகாரத்தில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், பொருளாதார ஒழுங்கு என்பது இருக்க வேண்டும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் முன்பாக  ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது தெரியாது. மேலும், ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை இழைக்கக் கூடாது. இந்த விவகாரத்தை வரைமுறைப் படுத்த வேண்டும்,’ என கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘தேர்தல் இலவசம் விவகாரத்தில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற தயங்குவது ஆச்சரியமாக உள்ளது. மேலும், இது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கும் உட்பட்டது அல்ல,’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி கூறுகையில், ‘இலவச அறிவிப்பு வெளியிடும் கட்சிகளை தகுதி நீக்கம் செய்யும் பிரச்னைக்குள் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. இது, ஜனநாயக விரோத செயல். இலவசங்களை அறிவிக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு ஜனநாயக நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை தெரிவிக்க வேண்டும். அதாவது ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்து தரப்பும் இதில் அடங்கும்,’ என கூறி, வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court , Political parties can't be ordered not to give freebies: Supreme Court is clear
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...