கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை

மதுரை: கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக மாணவர்களின் சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கல்வி உதவி தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரில் சங்கீதா என்ற மாணவி படித்து வந்துள்ளார். அவர் சூழ்நிலையின் காரணமாக கல்லூரில் இடைநிற்றல் ஆகி வெளியேறினார். இந்நிலையில் கல்லூரி சேர்க்கையின் போது கொடுத்த மாற்றுச்சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை திரும்ப கேட்ட போது கல்லூரி நிர்வாகம் அதனை தர மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து தனது சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாணவி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கானது  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சேர்ந்து அதற்கான கல்வி உதவி தொகையை பெற்றுள்ளார். இடைநிற்றலால் பெறப்பட்ட உதவி தொகையை அவர் திரும்ப கல்லூரிக்கு கொடுக்க வேண்டும். அதை தவறியதற்காக அவரது சான்றிதழ்களை கொடுக்கவில்லை என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாணவி கல்வி உதவி தொகை பெற்றபின்பு இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகையை திரும்பப்பெறவேண்டும் என்றால், மாணவிக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதனை விடுத்து அவரது மதிப்பெண் பட்டியல், சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்கதக்கது அல்ல. கல்வி சான்றிதழ்கள் விற்பனைக்கு அல்ல, எனவே மாணவிக்கான சான்றிதழ்களை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: