×

கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி

பெ.நா.பாளையம்:  கோவை, துடியலூரில் தண்டவாளத்தில் லாரி பழுதாகி நின்றதால் மேட்டுப்பாளையம்- சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியது. 3 ஆயிரம் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயிலின் வேகத்தை அதிகரிக்க தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பழுதான மற்றும் பலவீனமான தண்டவாளங்கள் அகற்றப்படுகின்றன. இதுதவிர, லெவல் கிராசிங் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், லெவல் கிராசிங்கை கடக்கும் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அச்சு முறிந்து தண்டவாளத்தில் நின்றுவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு ரயில் புறப்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 8.45 மணிக்கு துடியலூர் ரயில்வே கேட் மூடப்பட இருந்தது. அப்போது அந்த வழியே 30 டன் எடையுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிய லாரி வந்தது. அதற்குள் தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று நினைத்த டிரைவர், லாரியை ஓட்டினார். ஆனால், திடீரென மேடான பகுதியை கடக்க முடியாமல் லாரி திணறியது. ஒரு கட்டத்தில் அச்சு முறிந்து தண்டவாளத்தின் நடுவே லாரி நின்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த துடியலூர் கேட் கீப்பர் அருகில் உள்ள என்ஜிஜிஓ காலனி கேட் கீப்பருக்கு  தகவல் தெரிவித்தார். சுதாரித்து கொண்ட அவர் இது குறித்து ரயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து சிவப்பு விளக்கை காட்டினார். இதனால், ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது.
இருப்பினும், ரயில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பழுதாகி நின்ற லாரியின் அருகே ரயில் வந்தபோது விபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக வெறும் 100 அடி தூரத்தில் ரயில் நின்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் நின்றதும் சந்தேகம் அடைந்த பயணிகள் இறங்கி வந்து விசாரித்தனர். அப்போது, தண்டவாளத்தில் லாரி பழுதாகி நின்றதால் ரயில் நிறுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.  

அங்கிருந்த பொதுமக்கள், ஒன்று சேர்ந்து லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ள முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனைத்தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை இழுக்க முயன்றபோது பெல்ட் கட்டானது. தொடர்ந்து, இரும்பு கயிறு கட்டி கிரேன் மூலம் இழுக்கப்பட்டது. அப்போதும் லாரி நகரவில்லை.அதன்பின், பொக்லைன் வரவழைக்கப்பட்டு லாரியை பின்னால் தள்ளியபோது கிரேன் முன்னே இழுத்ததால் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக  ரயில் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.  தண்டவாளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையை உடனே அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Nilgiri Express , In Coimbatore Nilgiri Express train that survived the accident: Panic caused by broken down lorry; 3,000 passengers were shocked
× RELATED தண்டவாளத்தில் பழுதடைந்து நின்றது...