×

புதிய தொழில் முனைவோருக்கு கூடுதல் மானியத்துடன் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில்   படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்கத்தின் அடிப்படையில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்  ஏற்டுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி கடன்பெற 12ம் வகுப்பு தேர்ச்சி என கல்வி தகுதி தளரவு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியமும், வங்கிகள் கொடுக்கும் கடனுக்காக வட்டியில் 3 சதவீத மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோரின் தொழில் திட்ட தொகை குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கவேண்டும்.

அதிகபட்ச கடன் தொகை ரூ.5 கோடி. கடன்பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்கவேண்டும். கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு, தொழில்நுட்ப பயிற்சி (ஐடிஐ) தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

பொதுபிரிவினர் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். கடனுதவி பெறும் நபர்களுக்கு இணையதளம் வழியே தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.

50 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பெற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகலாம்.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Loan assistance with additional subsidy to new entrepreneurs: Kanchipuram Collector's report
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...