×

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2 கோடி வருவாய்

நெல்லை: தென்காசி மாவட்ட பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று சமீபகாலமாக நெல்லையில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், தாம்பரத்திற்கும் இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நெல்லை - தாம்பரம் ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்பட்டது.  தாம்பரம் - நெல்லை ரயில் திங்கள்கிழமை தோறும் இயக்கப்பட்டது.அதேபோல ஏப்ரல் 21 முதல் ஜூன் 27 வரை வியாழக்கிழமைதோறும் நெல்லை - மேட்டுப்பாளையம் ரயிலும்,  வெள்ளிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரயிலும் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக கோடைகால சிறப்பு ரயில்களாக சென்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த ரயில்கள் மூலம் கிடைத்த வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், ‘நெல்லை - தாம்பரம் ரயில் 9313 பயணிகளுடன் ரூ.65.77 லட்சம் வருமானமும், தாம்பரம்- நெல்லை ரயில் 8940 பயணிகளுடன் ரூ.55.14 லட்சம் வருமானமும் ஈட்டியுள்ளது.  நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் 7814 பயணிகளுடன் ரூ.38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் 8380 பயணிகளுடன் ரூ.42.14 லட்சம் வருமானமும் அளித்துள்ளது.  கடந்த இரண்டரை மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில்களால் மொத்தம் 34,447 பயணிகளுடன் ரூ.2.01 கோடி வருமானம் கிடைத்துள்ளது.வருமானம் கொழிக்கும் இந்த அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் இரு வாராந்திர சிறப்பு ரயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், ‘‘நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்திற்கும், வியாழக்கிழமைதோறும் மேட்டுப்பாளையத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதாலும், சாரல் விழா நடந்து வருவதாலும் தென்காசி வழியாக செல்லும் இந்த தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் இரு சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது.எனவே இவ்விரு சிறப்பு ரயில்களையும் நிரந்தரமாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாவூர்சத்திரம், கடையம், அம்பை சுற்றுவட்டார பயணிகள் ரயில்களை பிடிக்க தென்காசிக்கோ, நெல்லைக்கோ செல்ல வேண்டியதுள்ளது. சிறப்பு ரயில்களின் மூலம் தங்கள் ஊரில் இருந்தே ஏறிக் கொள்ள முடியும் என்பதால் அவற்றை விரும்புகின்றனர். நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கம் வரும் 18ம் தேதியும், நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம் செப்டம்பர் 4ம் தேதியும் முடிவடைய உள்ளது. அதற்கு முன்பாக தெற்கு ரயில்வே இவ்விரு சிறப்பு ரயில்களையும் நீட்டித்து இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்’’என்றார்.

Tags : Southern ,Railway ,Nellai ,Tenkasi , By special trains run from Nella via Tenkasi 2 crore revenue for Southern Railway
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...