×

தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரி; சென்னை ரயில் விபத்தில் இருந்து தப்பியது: கோவையில் பரபரப்பு

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரயிலின் வேகத்தை அதிகரிக்க தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பழுதான மற்றும் பலவீனமான தண்டவாளங்கள் அகற்றப்படுகின்றன. இதுதவிர, லெவல் கிராசிங் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், லெவல் கிராசிங்கை கடக்கும் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அச்சு முறிந்து தண்டவாளத்தில் நின்றுவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று  இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு ரயில் புறப்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 8.45 மணிக்கு துடியலூர் ரயில்வே கேட் மூடப்பட இருந்தது. அப்போது அந்த வழியே 30 டன் எடையுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிய லாரி வந்தது. அதற்குள் தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று நினைத்த டிரைவர், லாரியை ஓட்டினார். ஆனால், திடீரென மேடான பகுதியை கடக்க முடியாமல் லாரி திணறியது. ஒரு கட்டத்தில் அச்சு முறிந்து தண்டவாளத்தின் நடுவே லாரி நின்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த துடியலூர் கேட் கீப்பர் அருகில் உள்ள என்ஜிஜிஓ காலனி கேட் கீப்பருக்கு தகவல் தெரிவித்தார். சுதாரித்து கொண்ட அவர் இது குறித்து ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து சிவப்பு விளக்கை காட்டினார். இதனால், ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது.

இருப்பினும், ரயில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பழுதாகி நின்ற லாரியின் அருகே ரயில் வந்தபோது விபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக வெறும் 100 அடி தூரத்தில் ரயில் நின்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் நின்றதும் சந்தேகம் அடைந்த பயணிகள் இறங்கி வந்து விசாரித்தனர். அப்போது, தண்டவாளத்தில் லாரி பழுதாகி நின்றதால் ரயில் நிறுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள், ஒன்று சேர்ந்து லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ள முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனைத்தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை இழுக்க முயன்றபோது பெல்ட் கட்டானது. தொடர்ந்து, இரும்பு கயிறு கட்டி கிரேன் மூலம் இழுக்கப்பட்டது. அப்போதும் லாரி நகரவில்லை. அதன்பின், பொக்லைன் வரவழைக்கப்பட்டு லாரியை பின்னால் தள்ளியபோது கிரேன் முன்னே இழுத்ததால் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

Tags : Chennai ,Coimbatore , A lorry stalled on the tracks; Chennai escapes train crash: Coimbatore stirs
× RELATED சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!