விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னங்கள் சீரமைக்கப்படுமா?: மணிமண்டபம் அமைக்கவும் வலியுறுத்தல்

விளாத்திகுளம்:  விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் பராமரிப்பின்றி காணப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு சின்னங்கள் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுரகவி பாஸ்கரதாஸ், விடுதலை போராட்ட காலங்களில் தம் நாடக பாடல்களால் அனைவரது மனங்களையும் வசீகரித்தவர். இவர், விளாத்திகுளம் தாலுகாவில் நாகலாபுரம் அருகே  பள்ளிவாசல்பட்டி என்னும் கிராமத்தில் 1892ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் வெள்ளைச்சாமி. 4ம் வகுப்பு வரை நாகலாபுரத்தில் படித்த பாஸ்கரதாஸ், தன் பாட்டியின் ஊரான மதுரைக்கு சென்று சுண்ணாம்புக்கார தெருவில் வாழ்ந்தார். அங்குள்ள மக்களுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்த பாஸ்கரதாஸ் அவர்களது தொடர்பால் தெருக்கூத்து, நாடகத்தில் ஈடுபாடு கொண்டார். கவிதைகள் எழுதுவதில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டார்.ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி,  வெள்ளைச்சாமியின் கவியாற்றலை  புகழ்ந்து அவரை தன் அரண்மனைக்கு அழைத்து  சென்று பாராட்டி “முத்தமிழ் சேத்திர மதுர பாஸ்கர தாஸ்” என்ற பெயரை  சூட்டினார். 1931ல் வெளிவந்த முதல் தமிழ்,  தெலுங்கு பேசும் படமான காளிதாஸ் முதற்கொண்டு பல திரைப்படங்களுக்கு  பாஸ்கரதாஸ் பாடல்கள் இயற்றியுள்ளார். வள்ளித்திருமணம், பிரஹலாதா,  சுலோசனாபதி, திரௌபதி வஸ்திராஹரன், ராதாகிருஷ்ணன் சதி அகல்யா, சாரங்கதாரா,  ராஜாதேசிங்கு, ராதா கல்யாணம் உள்ள பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்துள்ளார்.

தேசிய விடுதலை, பஞ்சாப் படுகொலை, காந்தியின்  தியாகம், பகத்சிங் வீரம், தீண்டாமை ஒழிப்பு என அடுக்கடுக்கான உணர்வு சூழல்  கொண்ட இவரது பாடல்களினால் மக்கள் மனங்களில் சுதந்திர வாசம் பரவியது. அன்றைய டீ  கடைகளில் அதிகம் கேட்கப்படும் பாடல்களில் பாஸ்கரதாஸின் பாடல்களும் இருந்தன. பாஸ்கரதாஸின் பெரும்பாலான பாடல்கள்  விடுதலை போராட்ட தலைவர்கள், போராட்ட இயக்கங்கள், நிகழ்வுகள் பற்றியது.   அதிலும் இவர் தம் எல்லா பாடல்களிலும் துணிச்சலுடன் தன் பெயரை  பதித்திருக்கிறார். இதில் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறி  விடுவார்கள் என்பதை குறிக்கும் விதமாக ‘கொக்கு பறக்குதடி வெள்ளை கொக்கு  பறக்குதடி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. மேலும்  கப்பல் கொடி தோணுதே,  அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க, காந்தியோ பரம ஏழை சந்நியாசி போன்றவை  பாஸ்கர தாஸ் பாடிய பாடல்களில் முக்கியமானவை. பாஸ்கரதாஸ் மற்றும் லெஷ்மணதாஸ்  போன்ற பல இளைஞர்களின் உழைப்பால் தான் தமிழ் நாடக நடிகர் சங்கம் மதுரையில்  1920ம் ஆண்டு மே 30ல் ஆரம்பிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு அக்டோபர் 9ல்  மதுரையில் நடிகர் சங்க முதலாவது மாநாடு பாஸ்கரதாஸ் தலைமையில் சிறப்பாக  நடைபெற்றது.

பாஸ்கரதாஸ் 1952 டிச.20ல் நாகலாபுரத்தில் காலமானார். இவரை சிறப்பிக்கும்  வகையில் மதுரையில் இவர் வாழ்ந்த பகுதிக்கு மதுரகவி பாஸ்கரதாஸ் சாலை எனப்  பெயரிடப்பட்டுள்ளது. பாஸ்கரதாஸ் சமாதி நாகலாபுரத்தில் பராமரிப்பு  இல்லாமல் முட்புதர் நிரம்பி இருந்தது. அவரது  உறவினர்கள் மதுரகவி பாஸ்கரதாஸின் சமாதி, மனைவி ஒண்டியம்மாள், மகன் சேதுபதி  பாஸ்கரதாஸ் ஆகியோரின் சமாதியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு  வருகின்றனர். எட்டயபுரம் மகராஜாவும், பாஸ்கரதாசின் கவியாற்றலை புகழ்ந்து பாராட்டி பல நிலங்களை கொடுத்துள்ளார். எட்டயபுரம் மன்னரால் பாஸ்கரதாசுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் தற்போதும் நாகலாபுரம் பஸ் நிலையம் அருகில் கடைகள் சூழப்பட்டு காணப்படுகிறது. தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை: வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமை அமைச்சராக பணியாற்றி வீரபாண்டிய கட்டபொம்மனின் பல போர்களில் வெற்றிக்கு துணை நின்றவர் தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளை. ஒருமுறை ஆங்கிலேயர்கள் வைகுண்டம் களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்த 700 கோட்டை நெல்லை கொள்ளையடித்துச்சென்றார். ஆங்கிலேய அதிகாரி பெர்கெட் துரை 700 கோட்டை நெல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3300 தானாபதி பிள்ளையை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கேட்டுக்கொண்டார் ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் கொள்ளையடித்தது தவறு தான். அதற்காக ரூ.3300 மற்றும் கூடுதலாக அபராத தொகை சேர்த்து தருகிறேன்.

ஆனால் தானாபதி பிள்ளையை ஒப்படைக்க முடியாது என்றாா். ஜாக்சன் துரையை சந்திக்க வீரபாண்டிய கட்டபொம்மன் ராமநாதபுரம் கோட்டைக்குச் சென்ற போது சிவசுப்பிரமணியமும் உடன் சென்றார். ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்டபோது நடந்த மோதலில் ஆங்கில அதிகாரி கிளார்க் கொல்லப்பட்டார். அங்கிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பிப்பதற்கு சிவசுப்பிரமணியம் உதவியாக இருந்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் சிவசுப்பிரமணியனை கைது செய்தனர். திருச்சியில் நடந்த விசாரணையில் வீரபாண்டிய கட்டபொம்மன் தவறு செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு சிவசுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் நம்பிக்கைக்கு உரிய   அமைச்சராகவும், தளபதியாகவும் செயல்பட்ட தானாபதி சிவசுப்பிரமணியம் பிள்ளை கள்ளர் பட்டியில்  நடந்த மோதலில் கைது செய்யப்பட்டு 1799ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நாகலாபுரத்தில் பல்வேறு ஜமீன்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு பின்பு அவர் தலை துண்டிக்கப்பட்டு ஒரு ஈட்டியில் குத்தி வைத்தனர். அந்த இடத்தில் நினைவுத்தூண் நடப்பட்டு எந்தவித பராமரிப்பும் செய்யப்படாமல் உள்ளது. அந்த நினைவு  தூணை சுற்றி சாக்கடை மற்றும் குப்பை தொட்டிகளும் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய விடுதலைப் போராட்ட வீரரான தானாபதி சிவசுப்பிரமணியம் பிள்ளை நினைவுத்தூணை சீரமைத்து நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முகமது ஜக்காரியா கூறுகையில்: ‘‘விடுதலைப்போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கரதாஸ் பிறந்த நாகலாபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஊராக உள்ளது. பாஸ்கரதாஸ் புரட்சி மிக்க பாடல்கள் மூலம் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். 29 முறை சிறை சென்றவர். அவரது சமாதியை அரசு பராமரித்து மணிமண்டபம் அமைக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமை அமைச்சர் தானாபதி சிவசுப்பிரமணியம் பிள்ளை நினைவுத்தூண்  சீரமைக்கப்பட்டு மணிமண்டபம் அமைக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடி வரும் சூழலில் நாட்டுக்காக போராட்டம், விடுதலை நாடகம், புரட்சிகர பாடல் என பல்வேறு வகையில் போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான மதுரகவி பாஸ்கரதாஸ், தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை ஆகியோருக்கு நினைவு சின்னங்கள் அமைக்க வேண்டும்’’ என்றார்.

கட்டபொம்மன் தங்கிய கோட்டை மேடு

ஆங்கிலேயரை எதிர்த்து  வரிகட்ட முடியாது என்று கூறி போரிட்ட விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய  கட்டபொம்மன். வரி தொடர்பாக தன்னை வந்து சந்திக்கும்படி ராமநாதபுரம் மாவட்ட  கலெக்டர் ஜாக்சன் கூறிவிட்டு வீரபாண்டிய கட்டபொம்மனை சந்திக்காமல்  வில்லிபுத்தூர், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டார்.  மீண்டும் ஜாக்சனை சந்திக்க வீரபாண்டிய கட்டபொம்மன் ராமநாதபுரம் செல்லும்  போது நாகலாபுரம்-மதுரை சாலையில் உள்ள கோட்டையில் தங்கி சென்றுள்ளார்.  மேலும் பல்வேறு போர் நடவடிக்கைகளின் போதும் பதுங்கியிருப்பதற்கு   கோட்டைக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து சென்றுள்ளார். தற்போது இந்த  கோட்டை இடிந்து சிதிலமடைந்து எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.  இந்த கோட்டையை பொதுமக்கள் கோட்டைமேடு என்று அழைத்து வருகின்றனர். இந்த  கோட்டையில் காவலாளிகள் தங்கும் அறை, வீரபாண்டிய கட்டபொம்மன் தங்கி இருந்த  கோட்டை, அமைச்சர்கள் தங்கும் அறை மற்றும் கோட்டை உள்பகுதியில்  அமைக்கப்பட்டிருந்த கிணறு ஆகியவை சிதிலமடைந்து பராமரிப்பின்றி  காணப்படுகிறது. இந்த வரலாற்று நினைவு கோட்டையை சீரமைத்து நினைவுச் சின்னமாக  பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை கிடங்காக மாறிய அய்யாகிணறு

பாஸ்கரதாஸ் அப்பகுதியில் ஊர் மக்களுக்காக ஒரு நல்ல தண்ணீர் கிணறும் வெட்டிக்கொடுத்துள்ளார். அக்கிணறு “அய்யாக்கிணறு” என அழைக்கப்பட்டது. தற்போது இந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் குப்பை கிடங்காக மாறிவிட்டது.

Related Stories: