×

அதிமுக ஆட்சியில் பராமரிக்காமல் விட்டதால் பட்டுபோன மரங்களால் வரமறுக்கும் பறவை கூட்டம்

* சரணாலயங்களில் சீரமைப்பு அவசியம்
* கூடுதல் மரக்கன்றுகள் நடவேண்டும்

சாயல்குடி:  ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பறவைகள் சரணாலயங்களில் பட்டுபோன மரங்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனை சீரமைக்க வேண்டும் என பறவைகள் ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம். கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி, ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல், சக்கரைகோட்டை பெரிய கண்மாய் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பருவ மழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர் மாத கடைசி மற்றும் அக்டோபர் மாதங்களில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். தாழைகொத்தி, செங்கல்நாரை, நத்தைகொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கான், வில்லோவால்பவர், ஆஸ்திரேலியா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட  50 வகைக்கு மேற்பட்ட பறவை இனங்கள் வரும்.

இதனை போன்று மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு, தொண்டி காரங்காடு அலையாத்தி காடு, வாலிநோக்கம் கடல் தரவை மற்றும் கடல்தீவு பகுதிகளில் நண்டு திண்ணி உல்லான், முடிச்சு உல்லான், கல்திருப்பி போன்ற அரியவகை பறவை இனங்கள் வருவது வழக்கம். இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள், கடல், கடல் உயிரினங்கள் இருப்பதால் பல மைல் தூரம் கடல் கடந்து பறந்து வந்து இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டுகருவேல மரங்கள் மற்றும் தீவு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்லும். இந்நிலையில் கடந்த 2018க்கு முந்தைய ஆண்டுகளில் போதிய பருவ மழையின்றி ஏற்பட்ட தொடர் வறட்சியால் பறவைகள் வரத்து குறைந்தது. 2019ல் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் கண்மாய்களில் தண்ணீர் பெருகி ஓரளவு நிறைந்தது. அப்போது சரணாலயங்களுக்கு சுமார் 40 வகைக்கும் மேலான பறவைகளும், தீவு பகுதிகளில் சுமார் 75ஆயிரம் பறவைகள் வந்ததாக  வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து 2020 முதல் கடந்தாண்டு வரை நல்ல மழை பெய்தது. கடந்தாண்டு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு சித்திரங்குடி, சக்கரகோட்டை, தேர்ந்தங்கல், காஞ்சிரங்குடி போன்ற கண்மாய்கள் பெருகி தண்ணீர் கிடக்கிறது. ஆனால் பறவைகள் வரத்து குறைந்தே காணப்பட்டது. இதற்கு காலம் கடந்த பருவமழை உள்ளிட்ட காலநிலை மாற்றம் என்றாலும் கூட, முக்கிய காரணமாக கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்புகள் இல்லாததால் சரணாலயங்களில் இருந்த நூற்றுக்கணக்கான நாட்டு கருவேல மரங்கள் பட்டுபோய் சேதமடைந்து கிடைக்கிறது. புதிய மரங்களை நடுவதற்கு முன்வரவில்லை. குடிமராமத்து பணிகளும் முறையாக நடக்காததால் தண்ணீர் தேங்கவும் வழியில்லாமல் போனது. இதனால் பறவைகள் வரத்து குறைந்து வருகிறது. சில இடங்களில் குஞ்சுக்காக அடையில் இருந்த பறவைகள் இறந்தும் கிடக்கிறது.

மேலச்செல்வனூர், சித்திரங்குடி கிராமமக்கள் கூறும்போது: கிராமங்களுக்கு விருந்தாளிகள் போல் வந்து ஆரவாரத்துடன், வட்டமிட்டு இங்கும், அங்கும் பறந்து மெல்லிசை, இனிய ரீங்காரத்துடன் ரம்மீயமான சூழ்நிலை தரும் பறவைகள் வருவது மகிழ்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் தான் தீபாவளி பண்டிகையும் வரும். இதனை போன்று திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பது கூட கிடையாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வரத்து குறைந்துள்ளது வருத்தமாக உள்ளது. சரணாலய கண்மாயில் இருக்கும் நூற்றுக்கணக்கான மரங்கள் பட்டுபோய் சேதமடைந்து கிடக்கிறது. வரத்து கால்வாய், கண்மாய் உள்வாய் பகுதி தூர்ந்து போய் கிடக்கிறது. எனவே கால்வாய், கண்மாய்களை மராமத்து செய்ய வேண்டும், புதிய நாட்டு கருவேல மரங்களை நட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பிளம்மிங்கோ வருவதில்லை...
பறவைகள் ஆர்வலர்கள் கூறுகையில், ஆங்கிலேயர் காலம் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் இருந்து வருகிறது. இதனால் பருவமழை துவங்கிய உடனேயே வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல தரப்பட்ட பறவை இனங்கள் இனப்பெருகத்திற்காக வந்து செல்லும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பருவ கால நிலை மாற்றம், அடைகாத்து குஞ்சு பொறிக்க வசதியான போதிய மரங்கள் இன்மை காரணமான வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துவிட்டது. இதனால் உள்ளூர் பறவை இனமான நாரை, கொக்கு, கூழைகிடா, மயில், கவுதாரி, மணிப்புறா, செம்புவத்தி உள்ளிட்ட பறவைகள் மட்டுமே அதிகமாக உள்ளது. பிளம்மிங்கோ போன்ற ஒரு சில வெளிநாட்டு பறவைகள் கடல் பகுதிகளில் உள்ள தீவு பகுதிகள், தரவை பகுதியில் நல்ல இரை கிடைப்பதால் அப்பகுதியில் உள்ளது. எனவே சரணாலயங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மீண்டும் பறவைகள் வரத்து அதிகரிக்கும் என்றனர்.

Tags : AIADMK , A flock of birds flocks to dead trees due to lack of maintenance under the AIADMK regime
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...