×

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில், ஒரு சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தும்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021 டிசம்பர் 8ல் மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளது.

வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதிஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது; இந்த புகாரை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் இடம்பெற கூடிய அந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று சூர்யா, ஞானவேல் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதிஷ் குமார், நடிகர் சூர்யா மற்றும் ஞானவேலுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : Surya ,Gnanavel ,Jaybeem ,Madras High Court , Case filed against actor Suriya, director Gnanavel in Jaybeam case quashed: Madras High Court order
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்