வேலூரில் அடி குழாயுடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரம்: கவனக்குறைவாக செயல்பட்ட ஒப்பந்ததாரர் கைது..!!

வேலூர்: வேலூரில் அடி குழாயுடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் அளித்த புகாரில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார். வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிமுக ஒப்பந்ததாரர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் போது இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் மீதே சாலை போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்ததாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை அகற்றாமல் சாலை போடப்பட்டது. இவை தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில் பயன்பாட்டில் இருந்த அடிகுழாயை அகற்றாமல் அதனை புதைத்தபடி கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர், கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியில்லாதவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

திமுக ஆட்சி அமைந்த பின்னர், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அந்த ஒப்பந்ததாரர்கள் செயல்படுவதாக கார்த்திகேயன் புகார் தெரிவித்தார். இதனிடையே அடிகுழாயை புதைத்து கழிவுநீர் கால்வாய் அமைத்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஒப்பந்ததாரர்கள் குட்டி மற்றும் சரவணன், 2வது மண்டல உதவி பொறியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையர் அசோக் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், அடி குழாயுடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: