×

இந்தியாவின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர்: குடியரசு தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!

டெல்லி: இந்திய திருநாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றார். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக கூட்டணியின் சார்பாக மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 74.36 சதவீத வாக்குகள் பெற்று ஜெகதீப் தங்கர் வெற்றிபெற்றார்.

இதையடுத்து ஜெகதீப் தங்கர் குடியரசு துணைத் தலைவராக இன்று அதிகாரபூர்வமாக பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜெகதீப் தங்கர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார்.

ஜெகதீப் தங்கர் வரலாறு:

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தங்கர் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். 1989ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு தொகுதியில் வெற்றி பெற்றார். 1990ம் ஆண்டு ஒன்றிய அரசில் நாடாளுமன்ற இணையமைச்சராக பதவி வகித்துள்ளார். 2019ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


Tags : Jagadeep Thangar ,14th Vice President of ,India ,President ,Murmu , Jagadeep Dhankar, 14th Vice President of India, inaugurated
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!