×

கோவை குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம் 36 இடங்களில் காற்றாலை கோபுரங்கள்

கோவை:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளத்தை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், குளங்கள் சீரமைத்தல், குடிநீர், பாதாள சாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளம் சீரமைக்க பணிகள் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்தது. அதன்பின், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு ஆண்டுக்கு பின்பு தற்போது குறிச்சி குளத்தில் மீண்டும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குறிச்சி குளம் 334.92 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் கொள்ளளவு 50 மில்லியன் கன அடி ஆகும். இக்குளத்தின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 12.30 சதுர கி.மீ. கொண்டதாகும். ஸ்மார்ட் சிட்டி கீழ் மதிவண்டி பாதை, நடைபயிற்சி நடைபாதை, குளக்கரையில் நான்கு இடங்களில் அலங்கார வளைவுகள், பாதசாரிகள் உண்டு மகிழ குளக்கரையின் ஓரத்தில் 47 சிற்றுண்டிகள் மற்றும் பல வகையான சிறு அங்காடிகள், கோவை -பொள்ளாச்சி சாலையின் மேற்புறம் நவீன வகையான வாகன நிறுத்துமிடம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், குளத்தைச் சுற்றி 5.5 கி.மீ நீளத்திற்கு வண்ணமயமான அலங்கார விளக்குகள், 4 இடங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள், 36 இடங்களில் காற்றாலைக் கோபுரங்கள், 23 இடங்களில் பார்வையாளர் மாடங்கள், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியினை கண்டுகளிக்க ஏதுவாக சிறப்பு பார்வையாளர் மாடம், 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது. இப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்தும் பணிகளும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் ஒரு பகுதியாக படகு சவாரியும் இயக்கப்பட உள்ளது. இதற்காக படகு இல்லம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்த படகு சவாரி திட்டம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை வாலாங்குளத்தில் சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதேபோல், குறிச்சி குளத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு படகு சவாரி துவங்கப்படும். குறிச்சி குளம் மிகவும் பெரிய குளம்.

இதனால், அதிக அளவில் படகுகளை இயக்கலாம். இதனால் அரசுக்கு வருவாய் பெருகும். படகுகளை இயக்கும் போது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. இதுதவிர, குறிச்சி குளத்தில் ஆண்டு தோறும் படகு போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.குறிச்சி குளத்தில் படகு சவாரி இயக்கப்படும் பட்சத்தில் மதுக்கரை, சுந்தராபுரம், குறிச்சி, சிப்காட் பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் ஒரு பகுதியாக படகு சவாரியும் இயக்கப்பட உள்ளது. இதற்காக படகு இல்லம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்த படகு சவாரி திட்டம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.


Tags : Smart City ,Coimbatore Kuchi Lake , Smart City works are in full swing at Coimbatore Kurichi Pond Wind towers at 36 locations
× RELATED தூத்துக்குடியில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி