10 வருடங்களாக கண்டுகொள்ளாத அதிமுக அரசு நாயோடை நீர்தேக்கத்தை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சின்னாளபட்டி:  கன்னிவாடி நாயோடை நீர்தேக்கத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடிக்கு மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கன்னிவாடி நாயோடை நீர்தேக்கம். 41 ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்த நீர்தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து மழை பெய்தால் தண்ணீர் வரும்படி ஓடைப்பாதைகளும், நீர்வரத்து பாதைகளும் உள்ளன. கடந்த 11 வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின்போது தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி சீரிய முயற்சியால் ஆத்தூர் பகுதியில் சிறுமலை அடிவாரப்பகுதியில் ராமக்காள், ஆனைவிழுந்தான் ஓடை நீர்த்தேக்கமும், கன்னிவாடியில் நாயோடை நீர்த்தேக்கமும் கொண்டு வரப்பட்டு அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனால் திறந்துவைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு பின் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு நலப்பணிகளும், பராமரிப்பும் கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கத்தில் செய்யாததால் நீர்த்தேக்கம் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. நீர்த்தேக்கத்தின் மதகு வரை செல்லும் சாலை பிளவுபட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் குட்டை போல் நீர்த்தேக்கம் உள்ளது. கன்னிவாடி பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய அணையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையை தூய்மைப்படுத்த வேண்டுமென்று பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் அணையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து தற்போது நீர்த்தேக்கம் குட்டை போல் மாறி வருகிறது. மேலும் அணையை சுற்றி ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்தும் ஒருசொட்டு தண்ணீர் கூட நாயோடை நீர்த்தேக்கத்திற்கு வரவில்லை.

மேலும் நாயோடை நீர்த்தேக்கத்தின் தடுப்புச்சுவர்கள் உடைக்கப்பட்டு அணைக்குள் குடிமகன்கள் இறங்கி பாராக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 5 ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமும் கன்னிவாடி பேரூராட்சியின் குடிதண்ணீர் ஆதாரமாக விளங்கி வரும் நாயோடை நீர்த்தேக்கத்தை பொதுப்பணித்துறை நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கத்தின் அவலம் குறித்து அணையை பராமரிக்கும் நங்காஞ்சியாறு வடிநிலகோட்டம் உதவி பொறியாளர் கோகுலகண்ணனிடம் கேட்டபோது, விரைவில் அணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு அணையை சென்று பார்த்து செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Stories: