பிளவக்கல் அணைக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் விழுந்தது ஓட்டை: சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவிலில் இருந்து பிளவக்கல் அணை செல்லும் வழியில் உள்ள பிரதான கால்வாய் பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே உடனடியாக சரி செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. கிழவன் கோவிலில் இருந்து பெரியாறு அணை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக சரளைக்கற்கள் தெரிவதால் சைக்கிள் டூவீலர் மற்றும் பல்வேறு விதமான வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படுகிறது. பெரியாறு அணை வரை பஸ்கள் மற்றும் வாகனங்கள் இயங்கி வருகின்றன. பெரியாறு அணையில் இருந்து பிரதான கால்வாய் பெரியாறு அணைக்கு செல்லக்கூடிய ஓடுபாலம் உள்ளது. இதில் தண்ணீர் வரக்கூடிய கால கட்டத்தில் பாலத்தின் கீழே உள்ள குழாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் பாலத்தின் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பாலத்தின் மேலே தண்ணீர் செல்லும். அதோடு கூடுதல் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட்ப்பட்டாலும் பாலத்தின் மேலே தண்ணீர் செல்லும். இந்த பாலத்தில் கடந்த அதிமுக ஆட்சி இருந்தபோதே பெரிய ஓட்டை விழுந்தது. அதனை ஒட்டுப்போட்டு சாிசெய்தனர்.

தற்போது அந்த பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதால் மழை பெய்யும் காலம் தொடங்கி அணையில் தண்ணீர் மட்டம் உயர்ந்து திறக்கப்பட்டால் பாலம் உடைபடுவதோடு பெரியாறு அணைக்கு போக்குவரத்தும் துண்டிக்கும் நிலை ஏற்படும். அந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்ல முடியாதநிலை ஏற்படும். பாலம் உடைப்பு ஏற்பட்டால் பெரியாறு அணைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். இதனால் உடனடியாக 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தை தற்போதைய நிலையில் உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கையை மழை காலம் தொடங்குவதற்கு முன்பே எடுக்க வேண்டும். மழை காலம் முடிந்ததும் குழாய் பாலம் இல்லாமல் பெரிய பாலமாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: