×

அரசு, தனியார் துறைகளில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு கலை, அறிவியல் படிப்புகளுக்கு கூடுது மவுசு: மெருகேறும் பாடப்பிரிவுகளால் அயல்நாட்டிலும் வரவேற்பு

வேலூர்:அரசு, தனியார் துறைகளில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் கலை அறிவியல் படிப்புகளில் தொடர்ந்து சேர்க்கை அதிகரித்து வருகிறது.தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவு. அதோடு இக்கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் மட்டுமே இருந்தன. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவும், அவற்றின் கல்விக்கட்டணத்தை கருத்தில் கொண்டும் இப்படிப்புகளில் சேர்க்கை என்பது குறிப்பிடும்படியாக இல்லை.இந்த நிலையில் உலகளவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொழில்துறை வளர்ச்சியும், பல்வேறு துறைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியும் பொறியியல் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தியதுடன், புதிய பாடப்பிரிவுகளையும் புகுத்துவதன் அவசியத்தை ஏற்படுத்தின. அதேபோல் அதையொட்டிய வேலைவாய்ப்பும் அதிகரித்தது. இதனால் பொறியியல் படிப்புகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல், வேதியியல், இயற்பியல், உயிரி அறிவியல், உயிரி வேதியியல், வேளாண் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் என நாளுக்குநாள் பாடப்பிரிவுகளும் அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப சுயநிதி தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததுடன், அவற்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஜெட்வேகத்தில் அதிகரித்தது. மாணவர் சேர்க்கையில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டு, கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை  நடப்பது, வங்கிகளில் கல்வி கடன் போன்ற சலுகையும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு காரணமானது. ஆனால், தற்போது நிலை  தலைகீழாக மாறி வருகிறது. பொறியியல் கல்வி முடித்தவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதோடு, வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளில் அதிக மதிப்பெண், தனித்திறன் கொண்டவர்களை மட்டுமே பன்னாட்டு தொழில்நிறுவனங்கள் விரும்பி ஏற்றன. தனித்திறன் இல்லாத, குறைந்த மதிப்பெண்களுடன் பெயருக்கு பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரிகளை அவை தவிர்த்தன.

இதனால் வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது. மேலும் பொறியியல் கல்வியை சிறந்த கல்லூரியில் பயின்று அதிக மார்க் பெற்றால்  மட்டுமே அது பலனளிக்கும். அதனால தரம் குறைவான பொறியியல் கல்லூரிகளில் சேர  தயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் பெரும்பாலான  கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடப்பது கிடையாது. இதனால் ஒவ்வொரு ஆண்டும்  காற்று வாங்கும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை கூடி வருகிறது. இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் ராணுவம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மருத்துவத்துறை என பல்வேறு துறைகளிலும், மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி ஆய்வு மையங்கள், வேளாண்துறை, வேளாண் ஆராய்ச்சி மையங்களில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளால் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.  

ஒரு காலத்தில் பொறியில் படிப்புகளுக்கு அடுத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.காம்., பி.எஸ்ஸி., பி.ஏ., உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் சேரும் நிலை இருந்து வந்தது. தற்போது கலை, அறிவியல் படிப்புகளிலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஏராளமான பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில ஆண்டுகளை விட தற்போது மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான நாள் முதலே ஆன்லைன் மூலம் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், சுய நிதி பாடப்பிரிவுகளில் ஓசையின்றி மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது.

குறிப்பிட்ட சதவீத கல்லூரிகளில் மட்டுமே, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்ஸி., புள்ளியியல், உயிரியல் போன்ற காலியான பாடப்பிரிவுகளுக்கு தற்போது, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.
குறிப்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், இயற்பியல், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.பார்ம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு மாணவ மாணவிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களை தேர்வு செய்து படித்தவர்கள் கூட பி.காம்., பாடப்பிரிவை அதிகம் விரும்புகின்றனர். இதுபோன்ற காரணங்கள் மற்றும் சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கலை, அறிவியல் கல்லூரிகள் களைக்கட்டியுள்ளன.

மகளிர் கல்லூரி செயலாளர் கூறுவது என்ன?
இதுதொடர்பாக வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி செயலாளர் டி.மணிநாதன் கூறியதாவது: ‘தற்போது இன்ஜினியரிங் படித்தால் வேலையில்லை என்ற நிலை உள்ளது. அதோடு கணக்கை பாடமாக எடுப்பவர்கள் குறைவு. கட்டணம் குறைவாக உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளிலேயே கணக்கு படிக்க வருவதில்லை. கலை அறிவியல் படிப்புகளில் கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், நுண்ணுயிரியல், விலங்கியல், வேதியியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் ெகாரோனா தொற்றால் தற்போது நிறைய ஆய்வகங்கள் வந்துவிட்டன. அதனால் நிறைய வேலைவாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆங்கில பாடத்திலும் ஆர்வமின்மை காணப்படுகிறது. அதேபோல் தனியார் சுயநிதி கல்லூரிகளிலும், உதவி பெறும் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித மாறுதலும் இல்லை. அரசு கல்லூரிகளில் ஷிப்ட்-1, ஷிப்ட்-2 என்று உள்ள நிலையும், தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு ஈடாக அரசு கல்லூரிகளின் கட்டமைப்பும் மாறியுள்ளது. இதைவிட முக்கியமானது மக்களிடம் பணம் இல்லை. கொரோனா பாதிப்பு இருந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சேமிப்பு இல்லை. அதனால் அரசு கல்லூரிகளில் வழக்கத்தை விட அதிகமான சேர்க்கை உள்ளது’ என்றார்.

சுறுசுறுப்பான நிலையில் 4 மாவட்ட கல்லூரிகள்
வேலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வேலூர்  மாவட்டத்தில் வேலூரில் ஒரு அரசு கல்லூரி, குடியாத்தத்தில் ஒரு அரசு கல்லூரி  என 2 அரசு கல்லூரிகளும், அரசு உதவி பெறும் இரண்டு மகளிர் கல்லூரிகளும்,  ஒரு இருபாலர் கல்லூரியும், சுயநிதி கல்லூரிகள் 5ம் உள்ளன. திருவண்ணாமலை  மாவட்டத்தில் 3 அரசு கல்லூரிகளும், 24 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 அரசு கல்லூரிகளும், பல்கலைக்கழக  உறுப்புக்கல்லூரி ஒன்றும், அரசு உதவி பெறும் ஒரு கல்லூரியும், 13 சுயநிதி  கல்லூரிகளும் உள்ளன.  திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு அரசு கல்லூரியும்,  பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி ஒன்றும், அரசு உதவி பெறும் 3 கல்லூரிகளும்,  சுயநிதி கல்லூரிகள் 10ம் உள்ளன. நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 69 அரசு,  அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என உள்ளன. இக்கல்லூரிகளில்  தற்போது சுயநிதி கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகளில் சேர்க்கை  முடிந்துள்ள நிலையில் பிற சுயநிதி கல்லூரிகளில் சேர்க்கை வேகமெடுத்துள்ளது.  அதேபோல் அரசு கல்லூரிகளிலும் தற்போது கலந்தாய்வு பணி நடந்து வருகிறது.  கலந்தாய்வில் எப்போதும் இல்லாத அளவில் மாணவ, மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன்  கலந்து கொள்வதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டமைப்பு இல்லாத பொறியியல் கல்லூரிகள் மூட உத்தரவு
நம் நாட்டில் ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் பேர். அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15 லட்சம் பேர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளியில் வருகின்றனர். 2.5 லட்சம் பேர் கலை, அறிவியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவ்வாறு அரசு மற்றும் அரசு சாரா வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான கல்வி தகுதியை பெற்று வெளியேறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையால் தமிழகத்தில் குறிப்பாக பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் பொறியியல் கலந்தாய்வில் 1 லட்சம் இடங்கள் கூட நிரம்பாததால், முறையான கட்டமைப்பு இல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்து  உள்ளது.

4.70 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021  2022 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியானது. இதில் 10ம் வகுப்பில் தேர்வு எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்ததாக 12ம் வகுப்பில் இந்த வருடம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. கடந்த ஜூலை 27ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மொத்தமுள்ள 1,20,000 இடங்களுக்கு சுமார் 4,70,000 பேர் விண்ணப்பித்தனர்.  இவர்களில் 2,98,56 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்போது கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் முதல் கட்ட கலந்தாய்வு  ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கியுள்ளது. மேலும் அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 1,243 தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 1,568 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.


Tags : Increasing employment in government and private sectors, plus for arts and science courses: welcome in foreign countries due to excellent courses
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...