அதிமுக மீண்டும் ஒன்றிணையும்; மதுரையில் சசிகலா பேட்டி; செல்லூர் ராஜூ பதிலடி

அவனியாபுரம்: அதிமுக மீண்டும் ஒன்றிணையும் என சசிகலா தெரிவித்தார். மதுரை விமானநிலையத்தில் நேற்று காலை சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற மாயத்தேவர் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. ஆனால் விரைவில் அதிமுக மீண்டும் ஒன்றிணையும்’’ என்றார்.

செல்லூர் ராஜூ பதிலடி :சசிகலா பேட்டி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சசிகலாவின் பேச்சுக்கும் நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை. எங்களுக்கும் திமுகவிற்கும்தான் போட்டி. மற்றவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஒரு சிலர் அதிமுகவில் இருந்து செல்வதால் அதிமுகவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை’’ என்றார். மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி: மறைந்த அதிமுக முதல் எம்பியான மாயத்தேவர் உடல், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்தினர். நேற்று மதியம் சசிகலா அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாயத்தேவர் உடலுக்கு எடப்பாடி, நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். தொண்டர்கள் முடிவு செய்யும் கட்சி தான் அதிமுக. அதிமுகவை ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை’’ என்றார். இதன்பிறகு ஓ.பி.எஸ், மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்சி நிர்வாகிகளை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன்’’ என்றார்.

Related Stories: