விசாரணைக்கு ஆஜராகாத ஆம்பூர் டிஎஸ்பி திருவள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு சரவணன் என்பவர் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது நடந்த ஒரு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த இவருக்கு, அந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மூலமாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கடலூர் மாவட்ட எஸ்பி மூலமாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை. சரவணன் தற்போது ஆம்பூரில் டிஎஸ்பியாக உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும், துணை கண்காணிப்பாளர் சரவணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.  இதேபோல, வடலூர் காவல் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி தற்போது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஏழுமலை என்பவரும், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

Related Stories: