வாழ்வியல் மேம்பாட்டு கொள்கை-2022 செயல்படுத்த உத்தரவு

சென்னை: ‘‘வாழ்வியல் மேம்பாட்டுக் கொள்கை 2022’’ஐ நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவு:  தமிழ்நாடு வாழ்வியல் மேம்பாட்டு கொள்கைகள் 2022, சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்களிடம் இருந்தும் பெறப்பட்டதின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து கவனமாக பரிசீலித்த தமிழக அரசு அந்த கொள்கையை இணைத்துக் கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும்  முடிவு செய்து கீழ்க்கண்ட உத்தரவை வெளியிடுகிறது. அதன்படி, தமிழ்நாடு வாழ்வியல் மேம்பாட்டு கொள்கை 2022 என்பது உயிரி தொழில் நுட்பம் மற்றும் உயிரி சேவைகள், மருந்து தயாரிப்பு  மற்றும் ஊட்டச் சத்து தொழிற்சாலைகள், மருத்துவ செயலிகள், மருத்துவ ஜவுளித்துறை ஆகியவற்றுக்கு பொருந்தும்.

ரூ.50 கோடி முதலீடுகள் உள்ளதும் குறைந்தபட்சம் 50 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ள தொழில் ஆகியவற்றுக்கு இந்த கொள்கையின் மூலம் ஒரு சிறப்பு ஊக்கத் தொகை கிடைக்கும். இந்த ஊக்கத் தொகை பெறும் தகுதியுள்ள நிறுவனங்கள் குறித்தும் இந்த கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்க தொழில் துறை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிப்காட் பரிந்துரைகளின் பேரில் இந்த ஊக்கத் தொகை கிடைக்கும். இந்த கொள்கை தமிழ்நாடு உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014ல் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.  இந்த கொள்கை அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், படிப்படியாக மாற்றி அமைக்கப்படும்.  இவ்வாறு தமிழகஅரசின் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: