×

புள்ளி வைத்த பாஜ; கோலம் போட்ட நிதிஷ் தாமரையை துளைத்தது அம்பு: புஸ்வாணமானது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம்; மீண்டும் முருங்கை மரம் ஏற துடிக்கும் வேதாளம்

உலகத்திலேயே  மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்று தந்தது தேர்தல்தான். நாடு முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியே ஆட்சியை நடத்தும். ஆனால், இந்த தேர்தல் முறைக்கு மாற்றாக ரிசார்ட் அரசியல், குதிரை பேரம் போன்ற தில்லாலங்கடி அரசியலை (ஆபரேஷன் தாமரை, சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை) கற்று கொடுத்தது பாஜ. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜ, பீகாரில் ஒன்றிய அமைச்சராக இருந்தவர் மூலம் நிதிஷ் குமார் கட்சியை உடைத்து பாஜவை சேர்ந்தவரை முதல்வராக்க திட்டம் போட்டது. ஆனால், ‘அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்’ என்று அறியப்படும் நிதிஷ், ஆபரேஷன் தாமரை திட்டத்தை அம்பு (ஐக்கிய ஜனதா தளம் தேர்தல் சின்னம்) மூலமாக துளைத்து விட்டார்.

கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்தபோது 7 மாநிலங்களில் மட்டுமே அது தனி பெரும்பான்மையுடனும், கூட்டணி கட்சிகளுடனும் ஆட்சி நடத்தியது. அதன் பிறகு, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கும் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தின் மூலம், தற்போது வரை 17 மாநிலங்களில் பெரும்பான்மை, கூட்டணி ஆட்சி நடத்துகிறது. இதில், பீகாரும் அடங்கும். பீகாரில் வீசிய லாலுவின் அலையில் பாஜ.வால் அரசியல் செய்ய முடியவில்லை. இதனால், லாலுவுக்கு எதிராக ஐடி, சிபிஐ போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை  பயன்படுத்தி, அவரின் அரசியல் வாழ்க்கையே காலி செய்தது.

இதையடுத்து, லாலுவின்  கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தை அவரது மகன் தேஜஸ்வி யாதவ் வழி நடத்தி வருகிறார். 2015 பீகார் தேர்தலில் நிதிஷ், தேஜஸ்வி கூட்டணி அமோக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த ஆட்சியை கலைக்க ஆபரேஷன் தாமரையை பாஜ பயன்படுத்தியது. இதனால், 2 ஆண்டுகள் நன்றாக சென்ற கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு, பாஜ - நிதிஷ் கூட்டணி ஆட்சி அமைந்தது. நிதிஷ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர் பொறுப்பு பாஜ.வுக்கு வழங்கப்பட்டது.

* 3ம் இடத்தில் நிதிஷ்
அதிகாரத்தில் அமர்ந்த பின்பு பீகாரில் பாஜ தனது கட்சியை வளர்த்தது. இதே கூட்டணி 2020ல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. இத்தேர்தலில் பாஜ - 74, ராஷ்டிரிய ஜனதா தளம் - 75, ஐக்கிய ஜனதா தளம் - 43, காங்கிரஸ் - 19 இடங்களை  கைப்பற்றின. இத்தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற தேஜஸ்வி கட்சி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜ 2ம் இடமும், நிதிஷ் மூன்றாம் இடமும் பிடித்தார். நிதிஷ் கட்சி வேட்பாளர்கள் நிறுத்திய பெரும்பாலான தொகுதிகளில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. இதனால், கிட்டத்தட்ட 32 இடங்களில் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பை சொற்ப  வாக்குகளில் பறித்தது.  

அதிக இடங்களை கைப்பற்றியும் பாஜ, முதல்வர் பதவியை அடைய முடியாத நிலை  ஏற்பட்டது. இதனால், நிதிஷை ஓரம்கட்ட திட்டமிட்டு, பாஜ நிபந்தனைகளை அடுக்கியது. இதற்கு கொஞ்சமும் அசராத நிதிஷ், ‘நான்தான் முதல்வர். ஓகே என்றால் ஆட்சி அமைக்கலாம். இல்லையென்றால் போயிக்கிட்டே இரு’ என்று பாஜவுக்கு ஒரு நெற்றி அடி கொடுத்தார். இதனால், ஆடிய போன பாஜ, அதிகார மோகத்தை விடக் கூடாது என்பதால் நிதிஷின் கட்டளைக்கு அடி பணிந்து சென்றது. முதல்வராக மீண்டும் நிதிஷ் பதவியேற்றார். துணை முதல்வராக பாஜ.வின் சுஷில் குமார் மோடி பதவியேற்றார். அமைச்சரவையில் பாஜவை சேர்ந்த 16 பேர் இடம் பெற்றனர்.

* வலி தெரியாத பாஜ
படி ஏறி வந்தால்தானே கஷ்டமும், வலியும் தெரியும். பணத்தை வாரி இறைத்து சொகுசாக பறந்து வந்து மொட்டை மாடியில் இறங்கினால் எப்படி கஷ்டமும், வலியும் தெரியும். இப்படிதான் மற்ற கட்சிகளின் உழைப்பால், அதிகாரத்தில் பங்கெடுத்து மொத்தத்தையும் சுருட்ட நினைத்தால் யாராவது சும்மா இருப்பார்களா?. முதல்வர் பதவியை பிடிக்க நினைத்த பாஜ, நிதிசுக்கு நெருக்கமானவரும், ஒன்றிய அமைச்சராகவும் இருந்த ஆர்.சி.பி சிங் மூலம் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை அரங்கேற்றியது. இந்த போட்டியில் நிதிஷ் வீசிய அம்பு, தாமரை இருக்கும் இடமே தெரியாமல் போகும் அளவுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, ‘நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட் மாஸ்டர்’ என்று நிருபித்துள்ளார்.

* நிதிஷ்-ஆர்.சி.பி மோதல்
ஐக்கிய ஜனதா தளம் எம்பியாக இருந்த ஆர்.சி.பி சிங் நிதிஷுக்கு நெருக்கமாக இருந்தார். எம்பி ஆன பின்பு பாஜ தலைவர்களுடன் மிக நெருங்கி பழகினார். மோடி, அமித்ஷாவை அடிக்கடி சந்தித்து பேசினார். இதற்கு பாஜ கொடுத்த பரிசுதான், ஒன்றிய இரும்புத்துறை அமைச்சர் பதவி. இதையடுத்து, நிதிஷ் கட்சியின் தேசிய முகமாக ஆர்.சி.பி சிங் ஜொலித்தார். இதனால், நிதிஷுக்கும், ஆர்.சி.பி சிங்குக்கும் மோதல் ஏற்பட்டது.  நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஆர்.சி.பி சிங்குக்கு மீண்டும் நிதிஷ் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், எம்பி பதவியை இழந்த ஆர்.சி.பி சிங் விரக்தியில் இருந்தார். இவரை வைத்து ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து நிதிஷ் ஆட்சி கவிழ்க்க பாஜ கணக்கு போட்டது. இதையறிந்த நிதிஷ், ஆர்.சி.பி.சிங்கை கட்சியை விட்டு நீக்கினார். இது பாஜ-நிதிஷ் இடையே மோதலை உருவாக்கியது. இதையடுத்து, பாஜ தலைவர்களின் செயல்பாடுகள் மாறின.

* மரியாதை போச்சு...
முதல்வர் நிதிஷ் குமாரின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை குறைந்தது. பாஜவை சேர்ந்த 16 அமைச்சர்கள் தனியாக செயல்பட தொடங்கினர். நிதிஷை மேடைக்கு மேடைக்கு அவமானப்படுத்திய லோக் ஜன சக்தியின் தலைவர் சிராக் பாஸ்வானை பாஜ மறைமுகமாக ஆதரித்தது. பல சதிகளையும், ஆட்சி கவிழ்ப்புகளையும் பார்த்து வளர்ந்த நிதிஷ், புதிய ரூட்டை எடுத்தார்.  ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை’ என்பார்கள். அதை பயன்படுத்தி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் உதவியை நிதிஷ் நாட, அதன் தலைவர் தேஜஸ்வி யாதவும் ஓகே சொல்லி, ஒரே நாளில் அதிரடிகள் அரங்கேற்றி விட்டன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்  உட்பட 7 கட்சிகளின் ஆதரவுடன் நேற்று புதிய ஆட்சியை, தனது தலைமையில் மீண்டும் அமைத்து விட்டார் இந்த அரசியல் சாணக்கியர். இதனால், பாஜ. கடுமையான கோபத்தில் உள்ளது.

* மீண்டும் காட்சி மாறலாம்
மகாராஷ்டிராவில் அதிக எம்எல்ஏ.க்கள் இருந்தும், பாஜ.வால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏ.க்களை குதிரை பேரம், ரிசார்ட் அரசியல் மூலம் விலைக்கு வாங்கி ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து, உத்தவ்  தாக்கரே ஆட்சி அமைத்தார். சமீபத்தில் ஆபரேஷன் தாமரை மூலம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை வளைத்து, அவர் மூலம் எம்எல்ஏக்களை கொத்தாக தூக்கி, தாக்கரே ஆட்சியை பாஜ கலைத்து விட்டது. தற்போது, அங்கு கூட்டணி ஆட்சியும் அமைத்துள்ளது. இதேபோல், கர்நாடகா, மத்திய பிரதேசம்., கோவா போன்ற மாநிலங்களிலும் ஆபரேஷன் தாமரையால் ஆட்சியை கவிழ்த்து, தனது ஆட்சியை அமைத்துள்ளது. இதனால், பீகாரில் நிதிஷ் நடத்திய தரமான சம்பவத்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் நிதிஷ் ஆட்சியை கலைத்து, மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சிக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில், வேதாளம் மீண்டும் மரம் ஏற துடிக்கும்.

உடைந்தது ஏன்?
* கடந்த சில மாதங்களாக பூரண மதுவிலக்கு, அக்னிபாதை திட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாஜ - ஐக்கிய ஜனதா தளம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
* 2025 சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதை பாஜ தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பீகார் பாஜ தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
* முன்னாள் முதல்வரும், லாலுவின் மனைவியான ரப்ரி தேவியின் இல்லத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில், நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.
* கடந்த மே 20ம் தேதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களின் வீடுகளில் புலனாய்வு அமைப்புகள் சோதனையிட்டன. அதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
* கடந்த சி மாதங்களாகவே பாஜ.வின் எந்த நிகழ்ச்சிகளிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை. குறிப்பாக, பிரதமர் மோடி பங்கேற்ற அனைத்தை கூட்டங்களையும் புறக்கணித்தார்.

* மசோதாக்கள் நிறைவேறுதில் சிக்கல்
மாநிலங்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லாததால் (91 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்) மாநில கட்சிகளின் ஆதரவுடன்தான் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. சமீப காலமாக, பல மசோதாக்களை பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றி வந்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்களவையில் 16 எம்பிக்களும், மாநிலங்களவையில் 5 எம்பிக்களும் உள்ளனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர். தற்போது, பாஜ-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்ததால், அதன் எம்பி.க்கள் ஆதரவு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாஜ.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதரவு அளித்து வரும் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளையே அதிகம் நம்பி பாஜ உள்ளது. இதனால், மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது.


Tags : Kolam Nitish ,Vethalam , Dotted Baja; Arrow pierces Kolam Nitish's lotus: Pushwana 'Operation Lotus' plan; Vethalam is struggling to climb the drumstick tree again
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்