அதிமுக பொதுக்குழு கட்சி விதிகளின்படி நடந்ததா? ஓபிஎஸ்., இபிஎஸ் தரப்பிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி: விசாரணை இன்றும் தொடர்கிறது

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அர்விந்த் பாண்டியன், சி.திருமாறன் ஆஜராகினர். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகினர்.

அப்போது நீதிபதி, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி நடத்தப்பட்டதா, இல்லையா என்பது குறித்து மட்டும் வாதிட வேண்டும். பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றார். ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோர், ‘‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்த கூட்டமும் கூட்ட முடியாது. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் விருப்பத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் செல்லாததாக்கி விட முடியாது’’ என வாதிட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், தனது வாதத்தை தொடங்குவதற்கு முன்பே, ‘நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கூறும்போது அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்?. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா’’ என்று நீதிபதி கேட்டார்.

அதற்கு விஜய்நாராயண், ‘‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்வதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை’’ என்றார்.  அதற்கு நீதிபதி, கட்சியை நிர்வகிக்க அவர்களுக்கு அதிகாரம் தரப்பட்ட நிலையில் பொதுக்குழுவை கூட்ட அவர்களுக்கு விதிகளில் அதிகாரம் தரப்பட்டுள்ளதா? என்று கேட்டார்.

அதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயண், ‘‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு தான் தற்காலிக அவைத்தலைவர் நியமிக்கப்பட்டார். ஜூன் 23 பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்’’ என்றார்.

பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிகளின்படிதான் நடந்தது என்றால் அதை விளக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், தனது வாதத்தை தொடங்கினார். அப்போது, நீதிபதி இந்த வழக்கின் விசாரணை நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு தொடரும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.இதற்கிடையில், அதிமுக அலுவலக சாவி தொடர்பான மேல்முறையீட்டு மனு வரும் 19ம் தேதிக்குள் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: