கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைதான அப்பாவிகளை விடுவிக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பாக  கைதான அப்பாவிகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில், பிளஸ் 2 மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக வெடித்தது. காவல்துறையினரின் வாகனங்கள், பள்ளி நிர்வாகத்தின் பேருந்துகள், இதர வாகனங்கள், பள்ளி வளாகம் போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்நிலையில், மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பாக வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழுவினர் கள்ளக்குறிச்சி சென்று ஆய்வுகள் நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.  

பின்னர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு வழக்கறிஞர் சுரேஷ் அளித்த பேட்டி: 6 நாட்களாக 12 வழக்கறிஞர்கள் மூலம் இந்த உண்மை அறிவும் விசாணை நடந்தது. எங்கள் விசாரணையின் அடிப்படையில் மாணவி தற்கொலைக்கான அம்சங்கள் இருப்பதாக தெரியவில்லை. கொலைக்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக தெரிகிறது. மாணவி விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் ரத்தக்கறை இல்லை. சம்மந்தம் இல்லாத மற்ற இடங்களில் ரத்தக்கறை உள்ளது. மாணவியின் மரணத்தை அடுத்து எழுச்சிகரமான வகையில் போராட்டம் நடந்தது. கலவரம் எந்த அமைப்போ அல்லது திட்டமிட்டோ நடந்ததாக தெரியவில்லை. உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காததே போராட்டத்திற்கு காரணம். ஒரு சிலர் இதை தவறாக பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சில அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: