சுதந்திர தினத்தன்று தேசியக் கொடிக்கு பதில் சீக்கிய கொடி ஏற்றுங்கள்: பஞ்சாப் எம்பி சர்ச்சை பேச்சு

அமிர்தசரஸ்: ‘சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடிக்கு பதிலாக சீக்கிய கொடியை ஏற்றுங்கள்,’ என்று சிரோன்மணி அகாலி தளத்தின் எம்பி சிம்ரஞ்சித் சிங் மான் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ என்ற பெயரில், வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும்படி மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், சிரோன்மணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவரும், பஞ்சாபின் சங்ரூர் மக்களவை தொகுதி எம்பி.யுமான சிம்ரஞ்சித் சிங் மான், ஒன்றிய அரசின் வீடுதோறும் மூவர்ண கொடி இயக்கத்தை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சர்ச்சை கருத்தை தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், ‘ஆகஸ்ட் 14, 15ம் தேதிகளில் வீடுகள், அலுவலகங்களில் தேசியக்கொடிக்கு பதிலாக சீக்கிய கொடியை ஏற்ற வேண்டும். சீக்கியர்கள் சுதந்திரமானவர்கள். மாறுபட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று நம்மிடையே தற்போது இல்லாத தீப் சிந்து கூறியதை நாம் நினைவுகூர வேண்டும். இந்திய ராணுவம் நமக்கு எதிரிகளின் படை. எதிரி படைகளுடன் போரிடும்போது காலிஸ்தான்கள் வீரமரணம் அடைந்தனர்,’ என்று கூறியுள்ளார். இவரின் பேச்சுக்கு பாஜ, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அகாலி தள தலைவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: