குரங்கம்மை நோய் பரவலால் குரங்குகளை கொல்லும் பிரேசில் மக்கள்: அறியாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை

பிரேசிலியா: குரங்கம்மை நோய் வேகமாக பரவுவதால், பிரேசில் மக்கள் தங்களது அறியாமையால் குரங்குகளை கொன்று வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மே மாதம் முதல் 90 நாடுகளில் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பும், குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ்  கூறுகையில்: ‘குரங்கம்மை வைரஸ் தொற்று மனிதர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று  குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பிரேசிலில் இதுவரை 1,700 பேருக்கு குரங்கம்மை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று ஏற்படலாம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்நிலையில் பிரேசிலில் குரங்கம்மை காய்ச்சலுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் குரங்குகளை அதிக அளவில் கொன்று வருகின்றனர். குரங்கம்மை நோய்க்கு குரங்குகள்தான் காரணம் என்று செய்திகள் பரவி வருவதால், குரங்குகள் படுகொலை செய்யப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவ்விவகாரத்தில், குரங்குகள் கொல்லப்படுவதற்கு மக்களின் அறியாமையே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக பிரேசிலிய செய்தி இணையதளம் ெவளியிட்ட செய்தியில், கடந்த ஒரு வாரத்தில் 4 நகரங்களில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் மக்களால் கொல்லப்பட்டன. ஜூலை 29 அன்று, பிரேசிலில் குரங்கு காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.

Related Stories: