மக்களுக்கு பயனற்றமுறையில் கள்ளக்குறிச்சியில் சாலை ஓரமாக கிடக்கும் சுற்றுலா தகவல் பலகை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு சாலை முக்கிய பிரதான சாலை பகுதியாக அமைந்துள்ளது. அதாவது விழுப்புரம், சென்னை, சின்னசேலம், சேலம், சங்கராபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட நகரத்திற்கு செல்லும் சாலையாகும். கல்வராயன்மலை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நகரத்தின் வழியாக வெளியூர் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு சாலை பிரிவு வசதிகள் தெரியும் விதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி காந்திரோடு பிள்ளையார் கோவில் அருகில் பீடம் அமைத்து தமிழ்நாடு சுற்றுலா தகவல் பலகை அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த தகவல் பலகையில் கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் செல்ல 75 கி.மீ தூரம் எனவும், கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை செல்ல 244 கி.மீ தூரம் எனவும், கள்ளக்குறிச்சியிலிருந்து சின்னசேலம் செல்ல 15 கி.மீ தூரம் எனவும், கள்ளக்குறிச்சிலிருந்து சங்கராபுரம் செல்ல 18 கி.மீ தூரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பலகையானது கள்ளக்குறிச்சியில் கடந்த மாதத்திற்கு முன்பு நடைபெற்ற தேர் திருவிழாவின் போது அந்த தேர் காந்திரோடு சாலை வழியாக இழுத்து செல்லும்போது தகவல் பலகையின் மீது மோதும் என கருதி தகவல் பலகையை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அகற்றி அந்த பகுதியில் சாலையின் ஓரமாக வைத்துள்ளனர்.

தேர் திருவிழா முடிந்து ஒருமாதம் ஆன பின்னரும் அந்த தகவல் பலகையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு பொருத்தப்படாமல் சாலையின் ஓரமாக பயனற்ற முறையில் கிடக்கிறது. அதுவும் தலைகீழாக கிடக்கிறது. இந்த தகவல் பலகையில் தற்போது அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர் ஒட்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாகதான் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துறை துறை உயர் அதிகாரிகளும் சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. தகவல் பலகையை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மீண்டும் நான்குமுனை சந்திப்பு அருகே பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: