×

இரண்டரை மாதங்களில் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரயில்மூலம் ரூ.80 லட்சம் வருமானம்: தொடர்ந்து இயக்க பயணிகள் கோரிக்கை

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம்- நெல்லை சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 முதல் ஜூன் 27 வரை வியாழன் தோறும் நெல்லை-மேட்டுப்பாளையம், வெள்ளி தோறும் மேட்டுப்பாளையம்- நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் கோவை, பொள்ளாச்சி, பழனி , திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக கோடைகால சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. பொள்ளாச்சி, பழநி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் முதல் ரயில் இதுவாகும்.

இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே  சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த சிறப்பு ரயில் நெல்லை- மேட்டுப்பாளையம் ரயிலில் 7,814 பயணிகள் பயணித்தனர். இதன் மூலம் ரூ.38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம்- நெல்லை ரயிலில் பயணித்த 8,380 பயணிகள் மூலம் ரூ.42.14 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இரண்டரை மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 16,194 பயணிகளுடன் வருமானமாக 80 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அதிக வருமானம் ஈட்டி தந்த இந்த வாராந்திர சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘தற்போது  வியாழன் தோறும் நெல்லை- மேட்டுப்பாளையம், வெள்ளி தோறும் மேட்டுப்பாளையம்- நெல்லை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதாலும், சாரல் விழா நடைபெற்று வருவதாலும் தென்காசி வழியாக செல்லும் இந்த சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேதுறைக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக மேட்டுப்பாளையத்துக்கும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக  இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : Madupalayam ,Nella Special Rail , Mettupalayam-Nellie Special Train, Revenue, Passenger Demand
× RELATED மேட்டுப்பாளையத்தில் இருந்து...