சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த சாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசிற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் பறந்தது.

மேலும், இந்த அரசு விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என்று கலாச்சார பேரவை தலைவர் சிவன் கண்டித்திருந்தார். இதனையடுத்து, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 2001-ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை; தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.   

Related Stories: