திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது

திருச்சி: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 9 மணியளவில் ஒரு மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், நான் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனே கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார், மோப்ப நாய் டெய்சியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு  வந்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த எண்ணில் பேசியவர் திருச்சி பஞ்சப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி (43) என்பதும், அவர் காவலாளி என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது தெரியவந்தது. எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: