பொத்தேரி அரசு பள்ளியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மதுவிருந்து

செங்கல்பட்டு: பொத்தேரி ஒன்றிய ஊராட்சி அரசு பள்ளியில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மதுவிருந்து மற்றும் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பதட்டம் நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி, பிள்ளையார் கோயில் தெருவில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் கட்டி, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது இல்லை. இங்கு பகல் நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், இரவு நேரங்களில் பல்வேறு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து, வகுப்பறை மற்றும் மொட்டை மாடியில் விடிய விடிய மதுவிருந்துடன் கும்மாளம் அடித்து வருகின்றனர்.

பின்னர் காலை நேரங்களில் அனைத்து வகுப்பறைகளிலும் காலி மதுபாட்டில்கள், மீதமான நொறுக்கு தீனிகளை சிதறவிட்டு செல்கின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த புருஷோத் என்ற வாலிபர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பின்னர் அனைத்து நண்பர்களுக்கும் பிரியாணியுடன் மது விருந்து அளித்துள்ளார். இதனால் நேற்று காலை அனைத்து வகுப்பறைகளிலும் ஏராளமான காலி மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடந்ததாக அப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் வார்டு உறுப்பினரும் வழக்கறிஞருமான யுவராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். எனினும், இப்புகார்மீது கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனரிடம் வார்டு கவுன்சிலர் யுவராஜ் புகார் அளித்துள்ளார்.

எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி வளாகத்தில் நடைபெறும் மதுவிருந்து, கேளிக்கை கொண்டாட்டங்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்பள்ளிக்கு சுற்றுச்சுவருடன் போதிய பாதுகாப்பை வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: