விழுப்புரம் அருகே இன்று காலை பரிதாபம்: காட்டுப்பன்றி மீது பைக் மோதி 2 பேர் பலி

விழுப்புரம்: கடலூர் மாவட்டம் திரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45), பட்டுரோஜா (55) மற்றும் சின்னக்குச்சிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளவரசன் (34) இவர்கள் மூவரும் இன்று அதிகாலை 5.50 மணிக்கு திருக்கனூர் அருகே உள்ள பகண்டை கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக ஒரே பைக்கில் சென்றனர். புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வளவனூர் அடுத்த தனியார் ஆயில்மில் அருகே சென்றபோது, திடீரென காட்டுப்பன்றி சாலையின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடியது. எதிர்பாராதவிதமாக அந்த பன்றியின் மீது பைக் மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ராமமூர்த்தி, பட்டுரோஜா ஆகியோர் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் துடித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த இளவரசன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இளவரசனை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து வளவனூர் போலீசார் விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் காட்டுப்பன்றி மீது பைக் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் வளவனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: