×

செங்கரையில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

நாமக்கல்: கொல்லிமலை வட்டம், செங்கரையில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.என். கயல்விழி செல்வராஜ் வழங்கினார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செங்கரை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், உலக பழங்குடியினர் தின விழா மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.க.ரா.மல்லிகா அவர்கள் தலைமையில் (9.8.22) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள், பழங்குடியினர் நல இயக்குநர் திரு.எஸ்.அண்ணாதுரை மா.தொ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மூன்று நபர்களுக்கு தையல் இயந்திரங்களையும், இருளர் இன மக்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து ஒட்டுநர் உரிமங்களை 25 நபர்களுக்கும், 60 நபர்களுக்கு பழங்குடியினர் நல அட்டைகளையும், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 40 நபர்களுக்கு ரூ.1.28 கோடி கடனுதவிகள் உட்பட மொத்தம் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் உலக பழங்குடியினர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்ட பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த தோடர் பெண்கள் கலைநிகழ்ச்சி, தேனி மாவட்ட பழங்குடியினர் இனத்தைச்சேர்ந்த பளியர் கலைநிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்ட பழங்குடியினர் இனத்தைச்சேர்ந்த இருளர் கலைநிகழ்ச்சி,  செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து பிரமிடு வடிவம் அமைத்தல் நிகழ்ச்சி, செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சிலம்பம், செங்கரை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெண் கல்வியை வலியுறுத்தும் நாடகம், வாழவந்திநாடு அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்ற நாட்டுப்புற நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

உலக பாரம்பரியமிக்க நீலகிரி தோடர் பழங்குடியின பெண்களுடன் உடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நடனமாடினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில்; முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு கவனம் எடுத்து அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ரூ. 4,400 கோடி இத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7 லட்சம் பேர் பழங்குடியின மக்கள் உள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்கள் விரைந்து சென்றடைய பழங்குடியினர் நலத்திற்காக தனியாக அலுவலம் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் 1,338 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், 320 பழங்குடியின நல பள்ளிகளும், 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 1,374 விடுதிகள் இத்துறை மூலம் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் உயர் கல்வி பெறவேண்டும் அதிக அளவில் விடுதிகள் மற்றும் பள்ளிகள் உயர் முன்னுரிமை அளித்து தமிழக அரசு நடத்தி வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்துவைத்து மேம்படுத்துவதற்காக தன்னாட்சி அமைப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார நிலையை மேம்படுத்தவும் பல்வேறு தொழில் பயிற்சிகள் மற்றும் வாகனம் வாங்க, டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வாங்க மானிய கடன் உதவிகள், தாட்கோ திட்டத்துறையின் மூலம் வழங்கப்படுகின்றன.

பழங்குடியினர் வசிப்பிட பகுதிகளில் சாலை, கழிப்பிட வசதி, மின்விளக்கு அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் ரூ. 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ரூ.3 லட்சத்தில் வீடுகள் கட்டி தரப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் 443 வீடுகள் கட்டித்தர முதல்வர் அறிவித்தார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கயில் அழிவின் விளிம்பில் இருக்கும் பண்டைய பழங்குடினருக்கு 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

மேலும் வன்கொடுமை தீருதவித்தொகை வழங்கப்படுவதுடன், அவர்கள் குடியிருக்க வீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 36 வகையான பழங்குடியினங்களில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி இனங்களை பாதுகாக்க ஆவணப்படமாக்கி பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து வெளியூர்கள், சென்னையே பார்க்காத 150  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் சென்னைக்கு அழைத்து சென்று செஸ் போட்டி நடத்தப்பட்டு, அதில் 99 மாணவ, மாணவியர்கள் நேரில் பார்க்க செய்யப்பட்டதுடன் அவர்கள் சிறந்த வீர்ர்களுடன் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டது,

அவர்கள் பெண்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உதவித்தொகைக்காக ரூ.638 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார். எனவே பெற்றோர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.எஸ்.பிரகாஷ், அட்மா குழுத்தலைவர் திரு.எஸ்.செந்தில்முருகன்,

பழங்குடியினர் நல திட்ட இயக்குநர் திரு.ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்(பொ) திரு.மோகனசுந்தரம் அவர்கள், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொ) முனைவர்.ச.உதயகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் திரு.ஆர்.ராஜகுரு, தாட்கோ செயற்பொறியாளர் திரு.பி.நடராஜன், ஆகியோர் உள்பட அரசு அலுவலர்கள், பழங்குடி இன மக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.


Tags : Minister ,Kayalvinhi Selvaraj ,World Aboriginal Day ,Senggarh , On the occasion of the World Tribes Day held at Sengarai, the minister gave welfare assistance worth Rs. 2.38 crore to 250 people. Kayalvizhi Selvaraj
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...