பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம் ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 14 சவரன், பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அருகே ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகைகள் மற்றும் ₹90 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி(65), ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மனைவி கலைச்செல்வி. இவரது தாயார் சம்பூர்ணம் என்பவர், உடல் நலக்குறைவால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, காந்தி, அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரும் தினமும் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர்.

அதேபோல், நேற்று காலையும் காந்தி, அவரது மனைவி கலைச்செல்வி, மகன் யுவராஜ், மருமகள் கல்பனா ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சம்பூரணத்தை பார்த்துவிட்டு, மதியம் 3 மணி அளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 14 சவரன் நகைகள் மற்றும் ₹90 ஆயிரம் பணம் ஆகியன திருடு போயிருப்பது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து, காந்தி மேல்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். மேலும், ைகரேகை  நிபுணர் எஸ்ஐ  தமிழ் மணி சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார். தொடர்ந்து, இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓய்வு எஸ்ஐ வீட்டில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: