எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத காரையாறு இஞ்சிக்குழியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் முதல் பெண்-ராணி அண்ணா கல்லூரியில் இடம் கிடைத்தது

வி.கே.புரம் :  நெல்லை மாவட்டம் காரையாறு அருகே உள்ளது, இஞ்சிக்குழி கிராமம். பாபநாசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டருக்கு மேல் மலை பகுதியில் காரையாறு அணையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த 7 குடும்பத்தினர் மட்டும் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அதை தெரிவிக்க எந்த தொலைத்தொடர்பு வசதியும் கிடையாது. வாழை, கிழங்கு, மிளகு, தேன் போன்ற பொருட்களை விவசாயம் செய்கின்றனர். அடிப்படை தேவைகளுக்காக சுமார் 15 கிமீ தூரம் காட்டில் நடந்தும், அணையை கடந்தும் பாபநாசம் வந்து செல்கின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தனது மகள் அபிநயாவை பட்டப்படிப்பு வைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சிறு வயது முதலே விடுதியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையில், அபிநயா கடந்தாண்டு நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பித்தார். ஆனால் இணையதள வசதி இல்லாததால் கல்லூரியில் சேர்க்கை விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அவரால் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓராண்டு வீணான நிலையில் இந்தாண்டாவது எப்படியாவது படிக்க வேண்டும் என்று சில கல்லூரிகளில் அபிநயா விண்ணப்பித்துள்ளார்.

கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரும் என்பதால் தனது மகளுக்காக அய்யப்பன், கடந்த 3 மாதங்களாக வேலையை விட்டு விட்டு இஞ்சிக்குழியில் இருந்து இடம்பெயர்ந்து காரையாறு அணை அருகே உள்ள சின்ன மைலார் காணி குடியிருப்பில் வசிக்கிறார். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் செல்போன் டவர் கிடைக்கும் என்பதால் தினமும் அய்யப்பன் செல்போனுடன் டவர் கிடைக்கும் இடத்துக்கு சென்று விடுவார். அய்யப்பனின் இந்த லட்சிய பயணத்தின் பலனாக தற்போது அபிநயாவுக்கு நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பிஏ வரலாறு படிக்க இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் அபிநயா இஞ்சிக்குழியின் முதல் பட்டதாரி என்ற பெருமைக்கும் ஆளாகிறார்.

அட்மிஷன் முடிந்த நிலையில் கல்லூரி வகுப்பு எப்போது தொடங்கும் என கல்லூரியில் இருந்து மெயில் வரும் என்பதால் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சின்ன மைலாரிலேயே தங்கியுள்ளனர். இதுகுறித்து அபிநயா கூறும்போது, ‘எங்கள் ஊரில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது, என்னை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான் நன்றாக படித்து எனது தந்தை மற்றும் குடும்பத்துக்கு பெருமை சேர்ப்பேன்’ என்றார்.

Related Stories: