×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி உறவினர்கள் மறியல்-வாணியம்பாடியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

வாணியம்பாடி : ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாணியம்பாடியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(26). இவரது மனைவி சுசிசந்திரிகா(25). நிறைமாத கர்ப்பிணியான சுசிசந்திரிகா, கடந்த 31ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு பிரவசத்திற்காக உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு, சுகப்பிரசவம் ஏற்பட்டு ஆண்குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்கு பிறகு வீடு திரும்பிய சுசிசந்திரிகாவிற்கு தொடர் உடல் உபாதைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவ்வப்போது சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அவருக்கு, உடல் உபாதைகள் அதிகரிக்கவே, கடந்த 4 தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வேலூரில், சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அவரை நேற்று உடனடியாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த சுசி சந்திரிகாவின் உறவினர்கள் உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று காலை முற்றுகையிட்டு செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம், சுசி சந்திரிகாவின் உடல்நிலை மோசமடைந்ததற்கு முக்கிய காரணம், பிரசவம் பார்த்த செவிலியரின் தவறான சிகிச்சைதான் என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், திடீரென வாணியம்பாடி - கைலாசகிரி சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீசார், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலைந்து செல்ல மறுத்த அவரது உறவினர்கள், ‘சுசி சந்திரிகா கடந்த 10 தினங்களுக்கும் மேலாக மிகுந்த உடல் நலக் கோளாறுகளுக்கு உள்ளாகி கடும் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 10 தினங்களாக பச்சிளம் குழந்தைக்கு பால் வழங்க முடியாத நிலையிலும் உள்ளார்’ எனக்கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

 பின்னர் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு பாதிப்பு

பிரசவத்திற்கு பிறகு சுசி சந்திரிகாவிற்கு, பிறப்பு உறுப்பு வழியாக மலம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால், பிரசவத்தின்போது செவிலியர் அளித்த தவறான சிகிச்சையே இதற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘பிரசவத்தின் போது, சில பெண்கள் அதிக அழுத்தம் கொடுப்பதால், மலக்குடலில் இருந்து குறைந்த அளவிலான மலம் பிறப்பு உறுப்பு வழியாக இயற்கையாகவே வெளியேறும்படி நிகழ்கின்றது. இது 10 ஆயிரம் பேரில், ஒருவருக்கு ஏற்படும் அரிய நிகழ்வு. இதற்கு உரிய சிகிச்சை அளித்தால் இந்த பிரச்சனை முற்றிலும் நீங்கி பூரண குணமடையலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Vaniyambadi , Vaniyampadi: A pregnant woman who was admitted for delivery at the primary health center alleging that she was given wrong treatment
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...