கேரளாவில் தாயும், மகனும் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு மழை..!!

மலப்புரம்: கேரள மாநிலத்தில் தாயும், மகனும் அரசு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலப்புரத்தை அடுத்த அரிகோடு பகுதியை சேர்ந்தவர் 42 வயதான பிந்து. இவரது மகன் 24 வயதான விவேக். இருவரும் சமீபத்தில் கேரள அரசு பணியாளர் தேர்வை ஒன்றாக எழுதி தேர்ச்சி பெற்றனர். தாய் பிந்துவுக்கு கடைநிலை ஊழியர் பிரிவிலும், மகன் விவேக்கிற்கு கீழ்நிலை பிரிவிலும் வேலை கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரும் விரைவில் அரசு பணியில் சேர உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வரும் பிந்து, மகன் 10ம் வகுப்பு படிக்கும் போது அவரது புத்தகங்களை மகனுடன் சேர்ந்து வாசித்து வந்தார்.

அதன்பின்னர் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து பிந்து படிக்க ஆரம்பித்த நிலையில், மகனின் கல்லூரி படிப்பிற்கு பின்னர், அவரையும் சேர்த்துள்ளார். முதலில் 3, 4 முறை அரசு பணியாளர் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாமல் இருந்து வந்த பிந்து தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் தாய், மகனுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. இதுகுறித்து விவேக் பேசியதாவது, பயிற்சி மையத்துக்கு நானும், அம்மாவும் ஒன்றாக சென்று பயின்றோம். எனது தந்தை இருவருக்கும் உதவி செய்தார். ஆசிரியர்கள் மூலம் ஊக்கம் கிடைத்தது. தேர்வில் வெற்றி பெறுவோம் என்று இருவரும் நம்பினோம். தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என கூறினார்.

Related Stories: