பெரம்பலூர் அருகே மளிகை கடையில் 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல்-குட்கா சோதனையில் சிக்கியது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மளிகை கடையில் குட்கா விற்பனை சோதனைக்காக போலீசார் சென்ற போது பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் எஸ்பி மணி உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சிறப்பு படை போலீசார் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிறப்பு படையை சேர்ந்த போலீஸ் ஏட்டுகள் வெங்கடேசன், ஞானசேகர் ஆகியோர் பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

கவுல்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் (47) என்பவரது மளிகை கடையில் சோதனை செய்ய சென்ற போது இங்கெல்லாம் ஒன்றுமில்லை எனக்கூறி மகேந்திரன் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மகேந்திரனின் கடைக்குள் புகுந்து சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருளுக்கு பதிலாக 175 டெட்டனேட்டர் ஒரு பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் நேரில் வந்து மகேந்திரன் மற்றும் அவரது மகனான பிஇ பட்டதாரி கோபிநாத் (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஆபத்தான வெடிப்பொருட்களை வைத்திர ந்த குற்றத்திற்காக வழக்கு பதிந்து கோபிநாத்தை கைது செய்து கடையில் இருந்த 175டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், கல்பாடி எல்லையில் கடந்த 10 நாட்களுக்கு மூடப்பட்ட கும்பகோணம், குடவாசல், கொடராச்சேரி ரோடு, ராஜகோபால் மகன் ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கோபிநாத் வேலை செய்து வந்துள்ளார். கல்குவாரியை தற்போது மூடிவிட்டதால் பாறைகளை வெடிக்க பயன்படுத்தி மீதமுள்ள 175 டெட்டனேட்டர்களையும் தனது கடையில் பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Related Stories: