குஜராத் விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் 1,000 முதலைகளை பராமரிக்க போதிய இடவசதி உள்ளது: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: மாமல்லபுரம் முதலை பண்ணையில் உள்ள 1,000 முதலைகளை குஜராத்துக்கு இடமாற்றுவதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ.விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் 1000 முதலைகளை குஜராத்துக்கு இடமாற்றம் செய்ய ஒன்றிய, மாநில அரசுத்துறைகள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வன விலங்கு பூங்கா அமைக்க 2019ம் ஆண்டு விண்ணப்பித்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் வரைக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகளை அடைக்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குஜராத் விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் 1000 முதலைகளை பராமரிக்க போதிய இடவசதி உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. முதலைகள் இடமாற்றம் செய்ய சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் தொடர்பாக நிபுணர்களும் திருப்தி தெரிவித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: