மஞ்சூர் : மஞ்சூர் எமரால்டு லாரன்ஸ் பகுதியில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 5 ஏக்கர் தேயிலை, காய்கறி தோட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடு, மரங்கள் சாய்ந்துள்ளன. பெரும் பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்யாமல் சுமார் ஒரு மாத தாமதமாக கடந்த ஜூலை மாதம் துவங்கியது. சுமார் 20 நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால் மஞ்சூர் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான மரங்கள் விழுந்ததுடன், மண் சரிவுகளும் ஏற்பட்டன.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் மழை ஓய்ந்திருந்த நிலையில் வளி மண்டல சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்ய துவங்கியது. கடந்த ஒரு வாரமாக குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக, மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் இரவு, பகலாக இடைவிடாமல் பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் விழுவதும், மண் சரிவு ஏற்படுவதும், வீடுகள் இடிந்து விழுவதுமாக உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, குந்தா பகுதியில் 5.8 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையால் மஞ்சூர் அருகே எடக்காடு தலையட்டி பகுதியில் சமுதாய கூடம் பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. சமுதாய கூடத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது. இதனால், எடக்காடு ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், தங்காடு சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் தங்காடு, கன்னேரி, மந்தனை இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் கேரிங்டன் அருகே ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தலார் அருகே போர்த்தி பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் அறிவுறுத்தல்படி உதவி கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ் மேற்பார்வையில் குந்தா பிரிவு உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரவிக்குமார், நஞ்சுண்டன் மற்றும் சாலைப்பணியாளர்கள் சுற்றுப்புற பகுதிகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு மண் சரிவுகளும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இடைவிடாமல் பெய்த பலத்த மழையில் மஞ்சூர் அருகே சேரனுார் பகுதியை சேர்ந்த இந்திராணி, இத்தலார் கிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த நாகம்மாள், பெரியார்நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், தக்கர்பாபாநகர் பகுதியை சேர்ந்த சரசு ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. இதைத்தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா அறிவுறுத்தலின் பேரில் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவராணதொகையை வழங்கினர்.
இதேபோல், மஞ்சூர் அடுத்துள்ள கரியமலை பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி நடைபாதையுடன் கூடிய கருங்கற்களால் ஆன தடுப்புச்சுவர் நேற்று அதிகாலை மழைக்கு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எமரால்டு லாரன்ஸ் பகுதியில் சாலையோரத்தில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், சாலையின் கீழ்புறம் இருந்த தேயிலை தோட்டங்கள் மண்ணோடு அடித்து செல்லப்பட்டது. சுமார் 5 ஏக்கர் பரப்பிலான தேயிலை செடிகள் மற்றும் மலைகாய்கறி பயிர்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்திருக்ககூடும் என கூறப்படுகிறது. இதேபோல், கிண்ணக்கொரை, கோரகுந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.