×

8-வது முறையாக பீகார் முதலமைச்சராக இன்று மாலை மீண்டும் பதவியேற்கிறார் நிதிஷ்குமார்...

பாட்னா: பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகாரில் 2020ல் நடந்த சட்டப்பிரிவு தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும் வென்று கூட்டணி ஆட்சி அமைத்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 79, காங்கிரஸ் 19 தொகுதிகளில் வென்றன. முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக பீகார் மாநில பா.ஜ.க நிர்வாகிகள் செயல்பட்டு வந்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் நிலவி வந்தது. நிதிஷ்குமாருக்கு வலது கரமாக திகழ்ந்த ஆர்.பி.சிங்யை வைத்து ஆட்சியையும், கட்சியையும் உடைக்க பா.ஜ.க திட்டமிடுவதாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு சந்தேகம் எழுந்த நிலையில் பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.

அதை தொடர்ந்து ஆளுநர் பாகு சவுதனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிதிஷ், பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தோஜஸ்வி யாதவ்வை சந்தித்து புதிய கூட்டணியை உறுதிபடுத்தினார். அப்போது, ஐக்கிய ஜனதா தளம் , ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரியம் எம்.எல்.ஏ.கள் பங்கேற்ற கூட்டு கூட்டத்தில் கூட்டணியில் சட்ட மன்ற தலைவராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர், மீண்டும் ஆளுநரை தோஜஸ்வி யாதவ் உடன் சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினர். மேலும் தமது கூட்டணியில் 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் நிதிஷ்குமார் ஆளுநரிடம் வழங்கினார். இதையடுத்து, அவரை பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் பீகார் முதலமைச்சராக 8 வது முறையாக இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். அவருடன்  ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

பீகார் முதலமைச்சராக சுமார் 15 ஆண்டு காலம் பணியாற்றி உள்ள நிதிஷ்குமார், அம்மாநிலத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் 2024 பொது தேர்தலில் எதிரொலிக்கும் என பத்திரிகையாளர் ஜென்ராம் கருத்து தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சரான நிதிஷ்குமார் 2017ல் திடீரென பா.ஜ.க கூட்டணிக்கு மாறினார். 5 ஆண்டுகளில் பா.ஜ.கவை கழற்றி விட்டு மீண்டும் மெகா கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்துள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பெரிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதால் பா.ஜ.கவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags : Nitishkumar ,Bihar ,Chief Minister , Nitish Kumar takes office as Bihar Chief Minister again
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!