சென்னை மெரினா கடற்கரையில் பயன்பாடற்ற நிலையில் மெரினா ஸ்மார்ட் கடைகள்: சாலையோர வசிப்பவர்களின் கூடாரமாக மாறிய அவலம்...

சென்னை: சென்னை மெரினா கடற்கறையை அழகு படுத்தவும், கடைகளை முறைப்படுத்தி எணிக்கையை குறைக்கும் நோக்கத்தோடும் கடந்த அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கடைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதையொட்டி 9000 ஸ்மார்ட் கடைகள் தயாரிக்க சுமார் 16.47 கோடி மதிப்பில் டெண்டரும் விடப்பட்டது. இந்நிலையில் வியாபாரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படாத அந்த ஸ்மார்ட் கடைகளை பெற்று கொள்ள வியாபாரிகள் மறுத்து விட்டதால் நீண்ட காலமாக கடைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகள் மற்றும் புதிய வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கடைகள் வழங்க கடந்த 2020 டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜனவரி 2021ல் குலுக்களும் நடைபெற்றது.

அதன் பின்னர், மாநகராட்சி வழங்க இருந்த கடைகள் மிக சிறியதாக வடிவமைக்கப்பட்டதாலும், பழைய மெரினாவில் வியாபாரிகள் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கப்படாததாலும் அந்த கடைகளை ஏற்க வியாபாரிகள் மறுத்துவிட்டனர். தற்போது, இந்த 9000 ஸ்மார்ட் கடைகளும் ஒன்றரை ஆண்டு காலமாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. மயிலாப்பூர் சுடுகாடு, மெரினா கடற்கரை, மாநகராட்சி மைதானங்கள் என வெயில், மழையில் நீண்ட காலமாக கிடப்பதால் கடைகள் துருப்பிடித்து கொஞ்ச கொஞ்சமாக சீரழிந்து வருகின்றன. மெரினாவில் கடற்கரையோரம் போடாப்பட்டுள்ள ஒரு சில கடைகள் மட்டுமே சாலையோரம் வசிப்பவர்களின் துணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், சிலருக்கு பாராகவும் பயன்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டதும், முறையாக கடைகளை வடிவைமைக்கப்படாததும், தற்போதைய நிதி இழப்பிற்கு காரணம் என்று கூறுகின்றனர். 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தரமற்ற ஸ்மார்ட் கடைகளை, தற்போது பழைய பொருள்கள் வாங்குவர்களிடம் விற்றல் கூட செலவிட்டதில் கால் பங்கு பணம் கூட திரும்பாது என கூறும் வியாபாரிகள் தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் வியாபாரத்திற்கு ஏற்ற கடைகளை வடிவமைத்து, மெரினாவில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: