×

ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தாட்கோ, எச்சிஎல் நிறுவனம் இணைந்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எச்சிஎல் நிறுவனத்தில் இணைய வழி மூலமாக பயிற்சி வழங்கப்படும். இதற்கு தேவையான மடிகணினியை எச்சிஎல் நிறுவனமே வழங்கும். பின்னர், சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். இதன்போது, ஊக்கத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

இரண்டாம் வருடத்தில் மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில், ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ்-பிலானியில் 4 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்பினை அந்நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே படிக்கலாம். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா, உபி.யில் உள்ள அமிட்டி பல்கலை.யில் அந்நிறுவன வேலை வாய்ப்புடன், 3 வருட பிசிஏ பட்டப்படிப்பு படிக்கலாம். இதற்கு 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இதில், தாட்கோவின் பங்களிப்பாக எச்சிஎல் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில்  பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணத்தை தாட்கோ  ஏற்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ..1.18 லட்சம் கட்டணத்தை  தாட்கோ கல்வி கடனாக வழங்கும். இத்திட்டம் தொடர்பான விபரங்கள், பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adi Dravidian ,Tamil Nadu Government , Degree program with job opportunities for Adi Dravidian, Tribal students: Tamil Nadu Government Notification
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...