×

சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட்.! உஸ்பெகிஸ்தான் சாம்பியன்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

சென்னை: சர்வதேச அளவில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணியும், மகளிர் பிரிவில் உக்ரைன் அணியும் சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றன. இந்தியா 2 பிரிவிலும் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. மாமல்லபுரத்தில் கடந்த மாதம் ஜூலை 29ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்த இந்த தொடரில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 6 அணிகள் களமிறங்கி பதக்க வேட்டையாடின.

தொடக்கத்தில் இருந்தே அபாரமாக செயல்பட்ட இந்தியா அணிகள் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து முன்னிலை வகித்ததால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமானது. எனினும், கடைசி நாள் வரை சாம்பியன் பட்டம் பெறப்போகும் அணிகள் எவை என்பதை உறுதி செய்ய முடியாத அளவுக்கு போட்டி மிகக் கடுமையாக இருந்தது. நேற்று நடந்த 11வது சுற்று ஆட்டங்களின் முடிவில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி (19 புள்ளி) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றது. அர்மேனியா அணி (19 புள்ளி) வெள்ளிப் பதக்கமும், இந்தியா-2 அணி 3வது இடம் பிடித்து (18 புள்ளி) வெண்கலப் பதக்கமும் வென்றன. மகளிர் பிரிவில் உக்ரைன் (18 புள்ளி) தங்கப் பதக்கமும், ஜார்ஜியா (18 புள்ளி) வெள்ளிப் பதக்கமும் பெற்ற நிலையில், இந்தியா 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

Tags : 44th Chess Olympiad ,Uzbekistan ,India , International 44th Chess Olympiad.! Uzbekistan champions: 2 bronze for India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...