×

எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிர்வாகிகள் கிடைக்காமல் திணறல்: சென்னையில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டம் வெறிச்சோடியது

சென்னை: எடப்பாடியின் கோட்டையாக கருதப்படும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவில் நிர்வாகிகள் வராததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவாளர்கள் தேர்வு செய்துள்ளனர். மேலும், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரை கட்சியில் இருந்தும், அவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி தூக்கி விட்டார்.

இதற்கு பதிலடியாக, ஓ.பன்னீர்செல்வம், தற்போது வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தான் செயல்படுகிறேன். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரையும் ஓபிஎஸ் அதிமுக கட்சியை விட்டு நீக்கியதுடன், அவர்கள் வகித்து வந்த பதவியையும் பறித்துள்ளார். அதிமுக கட்சிக்கு சொந்தம் கொண்டாடி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளனர். அதுவரை இருவரும் மாறி மாறி நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 5.45 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக கட்சி நிர்வாகிகளும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் அணியினர் எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், அவர் ஆலோசனை நடத்திய மாவட்டங்கள் அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான மாவட்டங்களாகும். இதனால், பன்னீர்செல்வம் எதிர்பார்த்ததுபோல நிர்வாகிகள் யாரும் வரவில்லை. பொறுப்புகளில் இல்லாதவர்கள்தான் வந்தனர். அவர்களும் தென் மாவட்டங்களில் இருந்து இந்த மாவட்டங்களில் குடியேறியவர்கள். இதனால் எதிர்பார்த்த அளவு நிர்வாகிகள் வராததால், பன்னீர்செல்வம் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார். இதனால் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதா அல்லது கைவிடுவதா என்று குழப்பத்தில் உள்ளார்.

Tags : Salem ,Edapadi ,Palanisamy ,Krishnagiri ,OPS ,Chennai , Edappadi Palaniswami's bastion Salem, Krishnagiri districts run out of administrators: OPS consultation meeting in Chennai deserted
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!