வளர்ப்பு மகன் திருமண செலவு உள்ளிட்ட விவகாரம் ஜெயலலிதா வருமான வரி,செல்வ வரி வழக்குகள்: ஜெ.தீபா, தீபக் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 1995ம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்திற்காக 59 லட்சத்து 99 ஆயிரம் செலவு செய்ததாக கூறி அந்த தொகையை, 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சேர்த்து மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை  மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஐடி அதிகாரியின் உத்தரவை ரத்துசெய்தது.

இதேபோல சுதாகரன் திருமண நிச்சயதார்த்தத்தின்போது 8 லட்சம் மதிப்பிலான நகை குறித்த வழக்கையும், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

1997-98ல் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என, அவரது 4 கோடி அசையும் சொத்துகளை முடக்கியதற்கு எதிரான வழக்கிலும், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஐடியின் உத்தரவு ரத்து செய்தது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த மூன்று உத்தரவுகளையும் எதிர்த்து வருமான வரித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டில் மூன்று வழக்குகளை தொடந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2016ல் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் இந்த 3 வழக்குகளிலும் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: