×

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில், 600 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 44வது சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.

இந்த போட்டியை நடத்த சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. போட்டிக்காக உடனடியாக ரூ.100 கோடியையும் முதல்வர் ஒதுக்கினார். 186 நாடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியை உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலினே தலைமை ஏற்று நடத்தி வந்தார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்ட தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில், அனைவரும் வியக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாட்டின் சிறப்பை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியது. இதற்காக 52 ஆயிரம் சதுர அடி, 22 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த போட்டிகளில் இந்தியா உள்பட 186 நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இறுதி போட்டி வரை முன்னேறி உள்ளனர். கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலையுடன் நிறைவுபெற்றது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணி ஆலோசகர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், 44வது சர்வதேச சதுரங்க போட்டி இயக்குநர் பாரத்சிங் சௌஹான் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். நிறைவு விழா நடைபெறும், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறைவு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். கலை நிகழ்ச்சி முடிந்ததும், வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு மற்றும் கேடயம் வழங்குகிறார்.


Tags : 44th Chess Olympiad Closing Ceremony , 44th Chess Olympiad Closing Ceremony, Nehru Indoor Stadium, Chief Minister M.K.Stalin
× RELATED 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா:...