×

பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சியை உடைக்க பாரதிய ஜனதாசதித்திட்டம் திட்டியதாக கூறி கூட்டணியை முறித்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார்.  

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய  ஜனதா தளத்துக்கு 45 பேரும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 9 உறுப்பினர்களும்  உள்ளனர். எதிர்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 75 பேரும், காங்கிரஸுக்கு 19 பேரும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஐக்கிய  ஜனதா தளத்துக்கு 45 எம்எல்ஏக்களே இருந்தும் முதல்வராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டார். 77 இடங்களை கைப்பற்றியும் முதல்வர் பதவியை கைப்பற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்று வரை பாஜகவிடம் உள்ளது. இருந்தும் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் 2 பாஜக துணை முதல்வர்கள் பதவியேற்றனர். எப்படியாகிலும் ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் மோதல்கள் அதிகரித்து வந்தன. பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும், பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் ஒன்றிய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார். இதனால் பாஜக உடனான கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக கூறப்பட்டது. அதேநேரம் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஆர்சிபி சிங், தனது மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் முடிந்ததால் அவர் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இவருக்கு மீண்டும் மாநிலங்களவை எம்பி பதவியை நிதிஷ் குமார் வழங்காததால், அவர் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தார். சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தும் விலகினார். இவரை வைத்துக் கொண்டு, மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியது போல், ஆர்சிபி சிங் மூலமாக ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக அவர் அதிகார பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.


Tags : Bihar ,Chief Minister ,Nitishkumar ,bajka , Alliance with BJP, Bihar Chief Minister Nitish Kumar, resignation, United Janata Dal
× RELATED ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு...