சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் (POCSO ACT) குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. சென்னை பெருநகரில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனைகள் கிடைக்க 2012ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (Protection of Childrens from Sexual Offences Act-2012) குறித்தும் பெண் குழந்தைகள் அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (08.08.2022) சென்னையிலுள்ள 148 பள்ளிகளில், மாணவ, மாணவியர்க்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர். இம்முகாம்களில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், Good touch மற்றும் Bad touch குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

நேற்று 148 பள்ளிகளில் நடந்த போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் 13,878 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர். சென்னை பெருநகர காவல் குழுவினரின் போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: