மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் பாஜக - 9; சிவசேனா - 9 அமைச்சர்கள் பதவியேற்பு : 40 நாட்களாக நடந்த இழுபறி முடிவுக்கு வந்தது

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் பாஜகவில் 9 எம்எல்ஏக்களும், சிவசேனாவில் 9 எம்எல்ஏக்களும் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய அரசு அமைத்து 40 நாட்களுக்கு பின்னர் அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், முதல்வராக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வந்தார். ஆனால், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சி மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஒன்று திரட்டி, பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.

 இதனால் கடும் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே, வேறு வழியில்லாமல் தனது முதல்வர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பாஜக - சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஜூன் 30ம் தேதி முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்ற நிலையில், துணை முதல்வராக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார்.

மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக,  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்  ஆகியோர் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு, பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து  பேசினர். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இறுதி முடிவு  எடுக்கப்பட்டது. இதன்படியே நாளை (இன்று) அமைச்சரவை விரிவாக்கம்  செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய அரசு அமைந்து இன்றுடன் 40 நாட்கள் ஆன நிலையில், அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில், பாஜக எம்எல்ஏக்கள் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கண்டிவார், ஆர்விகே பாட்டீல், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே உள்ளிட்ட ஒன்பது பேரும், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் எம்எல்ஏக்கள் தாதா பூசே, ஷம்புராஜே தேசாய், சந்தீபன் பும்ரே உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்கள் பட்டியலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சரவை இலாகாக்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மும்பையில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மொத்தம் 18 எம்எல்ஏக்களுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர்  ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஒருவர் முஸ்லிம் அமைச்சர்

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் ஒரே ஒரு முஸ்லிம் எம்எல்ஏ அப்துல் சத்தாரும் அமைச்சராக பதவியேற்றார். இவர் மீது டெட் மோசடி புகார் உள்ள நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கடந்த 2019 தேர்தலுக்கு முன்பு சிவசேனா கட்சியில் சேர்ந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது இவர் ஏக்நாத் ஷிண்டே முகாமில் சேர்ந்ததால் அமைச்சராகி உள்ளார்.

Related Stories: