×

தர்மபுரி அருகே பாலம் அமைக்காததால் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மாணவர்கள்

பென்னாகரம்: தர்மபுரி அருகே பள்ளிமுத்தனூர் பகுதியில், நாகாவதி ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், கயிறு கட்டி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஆற்றை கடந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரக்காசனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிமுத்தனூர், பாலிக்காடு, மண்ணப்பன்கொட்டாய் கிராமங்களில், சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மூன்று புறங்களிலும் நாகாவதி ஆறு வளைந்து நெளிந்து செல்கிறது. இந்த பகுதிக்கு 3 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

கிராம மக்கள், மாணவர்கள் பஸ் நிறுத்தம் செல்ல ஆற்றை கடந்து செல்கின்றனர். கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால், எளிதாக அவர்கள் பஸ் நிறுத்தத்திற்கு செல்கின்றனர். ஆனால், மழைக்காலங்களில் நாகாவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, ஆற்றை கடந்து செல்ல பாலம் இல்லாததால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், 500 மீட்டரை கடந்தால் பஸ் நிறுத்தம் செல்லலாம் என்பதாலும், மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் கயிறு கட்டி ஆற்றில் இறங்கி செல்லும் நிலை உள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, மாற்று உடையில் வந்து, ஆற்றை கடந்து சென்று, அதன்பிறகு அங்குள்ள மறைவிடத்தில் நின்று சீருடையை அணிந்து கொண்டு செல்கின்றனர். இந்த பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டுமென, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆற்றில் ஆழம் குறைவாக ஒரு பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர் ஒருவர், தனது நிலம் வழியாக செல்லக்கூடாது என கற்களை வைத்து வழியை அடைத்ததால், அந்த பாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும், 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு தரைமட்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆற்றில் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டிருப்பதால், அந்த பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளதால், வேறு வழியின்றி இப்பகுதி மக்கள், 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று அரக்காசனஹள்ளி பஸ் நிறுத்தத்தை அடைய வேண்டியுள்ளது. நாகாவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டால், 500 மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிறுத்தத்தை எளிதாக அடைய முடியும். இப்பகுதியில் பாலம் அமைப்பதற்கு 300 மீட்டர் நீளத்திற்கு இடம் தேவைப்படுகிறது. ஆனால் ஆற்றின் இருகரை பகுதிகளிலும் பட்டா நிலங்கள் இருப்பதால், அவர்கள் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களும் உள்ளதால், அப்பகுதியில் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், பள்ளிக்கு உரிய நேரத்திற்கு செல்வதற்காக, வேறுவழி இல்லாமல் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக, ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாகாவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Darmapuri , Students cross the river by tying a rope as there is no bridge near Dharmapuri
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...