கண்ணிவெடி தாக்குதலில் பாக். டிடிபி அமைப்பின் தளபதி பலி: ஆப்கான் சென்ற போது பயங்கரம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மதரஸாக்களில் படித்த முன்னாள் பத்திரிக்கையாளரும்தெஹ்ரிக்-இ-தலிபான்  பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பின் தளபதியுமான உமர் காலித் கொராசானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தானின் பெர்மால் மாவட்டம் நோக்கி வாகனத்தில் சென்றனர்.

அப்போது நடந்த கண்ணி வெடி (ஐஇடி) தாக்குதலில் தளபதி உமர் காலித் கொராசானி, இதர தளபதிகள் அப்துல் வாலி முகமது உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். அப்துல் வாலி முகமதுவின் தலைக்கு அமெரிக்கா 3 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்து இருந்தது. அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புடன் இணைந்த ஜமாத் உல்-அஹ்ரார் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் தான் அப்துல் வாலி முகமது ஆவார்.

பாகிஸ்தானில் பிறந்த இவர், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் குனார் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார். முன்னதாக குனார் மாகாணத்தில் பஜார் பழங்குடியின் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவரான அப்துல் ரஷீதும், கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் ஏஜென்சிகளால் ஆப்கானிஸ்தானில் தனது தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க போவதாக தெஹ்ரிக்-இ-தலிபான்  பாகிஸ்தான் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: