×

குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டில் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத், உள்ளிட்ட 4 பேருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. தண்டனையை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கைது மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் தொடர்பாகச் சாட்சியம் அளித்த ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பின் இருப்பு சாட்சி என்றும் அவரது சாட்சியத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி; குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது. பொதுநலனின் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன் வருகின்றனர்.

காவல்துறையில் இருப்பு சாட்சி என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலைமறைவு குற்றவாளியான சரவணன்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காக சரவணனுக்கு இரையாகி விட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி , நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


Tags : Madras High Court , Civilians do not come forward to testify in criminal investigations: Madras High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு